ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தீவிர சிகிச்சை பிரிவு அறையை மாற்றி அமைத்தது ஏன்?


ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தீவிர சிகிச்சை பிரிவு அறையை மாற்றி அமைத்தது ஏன்?
x
தினத்தந்தி 6 Sept 2018 5:27 AM IST (Updated: 6 Sept 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தீவிர சிகிச்சை பிரிவு அறையை மாற்றி அமைத்தது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,
.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சத்தியபாமா குறுக்கு விசாரணைக்காக நேற்று ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் அரவிந்தன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது அவர், ‘நான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது கேட்டறிந்து அதுகுறித்த விவரங்களை மருத்துவ ஆவணங்களில் பதிவு செய்தேன். ஜெயலலிதா அளித்த சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விளக்கமாக கூறுவார்கள். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பித்துரை உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்தனர். அதுபோன்று ஜெயலலிதாவை யார், யார் பார்க்க வந்தார்கள் என்ற விவரங்களையும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குறித்த விவரங்களையும் மருத்துவ ஆவணங்களில் பதிவு செய்துள்ளேன்’ என்று கூறி உள்ளார்.

‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தீவிர சிகிச்சை பிரிவு அறை மாற்றப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆணையத்தில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனையின் என்ஜினீயர் சேஷாத்திரியிடம் இதுதொடர்பாக ஆணையம் நேற்று விசாரணை மேற்கொண்டது.

அவரிடம், ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தீவிர சிகிச்சை பிரிவு அறையை மாற்றி அமைத்தது ஏன்?, அதுபோன்று அறையை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினரிடம் முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா?, அறையை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார்.

பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவும், அறையை மாற்றி அமைக்க பெறப்பட்ட முன் அனுமதி கடிதத்தை தாக்கல் செய்யவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார். 

Next Story