மாநில செய்திகள்

முட்டை டெண்டரை நிறுத்தி வைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Egg tender should be stopped The court ordered the Tamil Nadu government

முட்டை டெண்டரை நிறுத்தி வைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

முட்டை டெண்டரை நிறுத்தி வைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
சத்துணவு திட்டத்துக்காக முட்டை கொள்முதல் செய்யும் டெண்டர் நடவடிக்கையை வருகிற 20-ந்தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பாணை தொடர்பாக தமிழக அரசு கடந்த 20-ந்தேதி பிறப்பித்தது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில், கோழி பண்ணை உரிமையாளர்கள் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘முட்டை கொள்முதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும், இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்கவுமே பல்வேறு நிபந்தனைகள் விதித்து தமிழக அரசு அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, ‘மனுதாரர்களில் சிலரை டெண்டர் நடவடிக்கையில் அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர். இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தவேண்டியதுள்ளது. அதனால், இந்த டெண்டர் நடவடிக்கையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும். அல்லது மனுதாரர்களையும் இந்த டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கவேண்டும்’ என்றார். இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அட்வகேட் ஜெனரல் நேற்று முன்தினம் கூறினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘இந்த வழக்கில் தமிழக அரசின் நிலை குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்றார்.

அப்படியென்றால், முட்டை கொள்முதல் டெண்டர் நடவடிக்கையை அரசு நிறுத்தி வைக்கவேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முட்டை கொள்முதல் டெண்டரை வருகிற 20-ந்தேதி வரை தமிழக அரசு நிறுத்தி வைக்கவேண்டும். இந்த வழக்கை வருகிற 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இந்த வழக்கிற்கான பதில் மனுவை வருகிற 7-ந்தேதிக்குள் அரசு தாக்கல் செய்யவேண்டும். அந்த பதில் மனுவுக்கு, மனுதாரர்கள் வருகிற 12-ந்தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...