குட்கா ஊழல் வழக்கில் 2 தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்


குட்கா ஊழல் வழக்கில் 2 தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்
x
தினத்தந்தி 6 Sep 2018 5:57 AM GMT (Updated: 6 Sep 2018 5:57 AM GMT)

குட்கா ஊழல் வழக்கில் 35 இடங்களில் சிபிஐ சோதனையை தொடர்ந்து 2 தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். #GutkhaScam #CBIRaid

சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., இந்த ஊழல் தொடர்பாக பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன.

நேற்று தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள். மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, இதேபோல பாண்டிச்சேரி கர்நாடக மாநிலம் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட சோதனை நடந்தது.

இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர். இதில் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் நடைபெற்ற சோதனை இன்று காலை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சில பகுதிகளிலும் இன்று மதியம் சோதனை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. பிடி இறுகுவதால் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.  இந்த நிலையில்  குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ 2 தரகர்கள்  கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லி அழைத்து செல்லப்பட உள்ளனர்.  

Next Story