இடைத்தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கு 3 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்குமா? தலைவர்கள் எதிர்பார்ப்பு


இடைத்தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கு 3 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்குமா? தலைவர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 Nov 2018 4:06 AM IST (Updated: 2 Nov 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏற்கனவே போட்டியிட்ட 3 தொகுதிகளை தி.மு.க. மீண்டும் தருமா? என்று கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

சென்னை,

தமிழகத்தில் ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், தற்போது 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, காலி இடங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி தமிழக அரசு கோரிக்கை விடுத்ததால், திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்த இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், 18 எம்.எல்.ஏ.க் களின் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்ட பிறகு, 18 பேரும் மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இப்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துவிட்டார்.

எனவே, ஜனவரி மாதத்துக்குள் தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறப்போவது உறுதியாகியுள்ளது. இந்த 20 தொகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திருவாரூரை தவிர ஏனைய 19 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர்களில் 18 பேர் இப்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அவர்கள் 18 பேரும் இந்த முறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. தரப்பில் இந்த 18 தொகுதிகளுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் புதிதாக வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூரில் ஏற்கனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் பன்னீர்செல்வம் என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப்படை ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 5 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகளும், மற்ற 3 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. 176 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கியது.

தற்போது, காலியாக உள்ள 20 தொகுதிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, இதில் 16 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டுள்ளது. சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியும், பெரம்பூர் தொகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் போட்டியிட்டுள்ளது.

தற்போது, தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இல்லை. ஆனால், ஏனைய 3 கட்சிகளும் அந்த கூட்டணியில் தான் தொடருகின்றன. எனவே, நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் தி.மு.க. தலைமை தங்கள் கட்சிக்கே குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கும் என்று கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

கடந்த முறை பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தலில் அவர் 519 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். எனவே, இந்த இடைத்தேர்தலிலும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்ட திட்டமிட்டுள்ளார்.

இதேபோல், சோளிங்கர் தொகுதியை காங்கிரஸ் கட்சியும், ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சியும் கேட்டுப்பெற திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எனவே, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி வழங்குவது குறித்து விரைவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story