மதுரையில் உள்ள ஓட்டலில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேனா? டி.டி.வி. தினகரன் விளக்கம்


மதுரையில் உள்ள ஓட்டலில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேனா? டி.டி.வி. தினகரன் விளக்கம்
x
தினத்தந்தி 3 Nov 2018 4:00 AM IST (Updated: 3 Nov 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் உள்ள ஓட்டலில் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்து பேசவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

சென்னை,

சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிப்பு சம்பந்தமாக, எந்த சம்பந்தமும் இல்லாமல் எங்கள் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து இருப்பது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறுகிறார்கள். அந்த ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆராய்ந்தாலே, ஓட்டலில் நான் யாரை சந்தித்தேன் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கியிருந்து, பிறகு அங்கிருந்து சென்ற பிறகு தான் நாங்கள் ஓட்டலுக்கே சென்றோம். இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. ஜி.கே.வாசன் கூட அந்த ஓட்டலில் தங்கியிருந்தார். ஒரே ஓட்டலில் பல தலைவர்கள் தங்கியிருப்பது புதிதல்ல, வழக்கமான ஒன்று தான்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாங்கள் மேல் முறையீட்டுக்கு செல்லவில்லை என்று சொன்னவுடன், எவ்வளவு பேர் எங்களிடம், ஏன் மேல் முறையீட்டுக்கு செல்லவில்லை என்று கேட்கிறார்கள். எங்களை பொறுத்தவரையில் மக்கள் மன்றத்தில் சந்திப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

இந்த ஆட்சியின் ஆயுள் ஒரு நிமிடம் கூட நீடிக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். 20 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது. தங்க தமிழ்செல்வன் உள்பட அனைவரும் என்னுடன் தான் இருக்கிறார்கள். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story