‘கஜா’ புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தரப்படும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
‘கஜா’ புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தரப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
புதுக்கோட்டை,
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்களை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் உதவிகளை வழங்கினார்.
அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், இந்திய ரெயில்வே பயணிகள் நலவாரியக் குழுத் தலைவர் எச்.ராஜா, தமிழக பா.ஜ.க. தலைவரும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் இயக்குனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் மத்தியில், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நகர் மற்றும் கிராம பகுதிகளில் பொது மக்களுக்கு வீடு கட்டித் தரப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த அனைவருக்கும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய தென்னை வாரியத்தின் சார்பில் விவசாயிகள் அனைவருக்கும் தேவைக்கேற்ப பிற மாநிலங்களிலிருந்து தென்னை மரக்கன்றுகள் வரவழைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் அதிக வருமானம் பெரும் வகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் ஊடுபயிர் பயிரிட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும்.
விவசாயிகளின் பயிர் காப்பீட்டிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் 47 ஆயிரம் மின் கம்பங்கள் முழுவதுமாக சாய்ந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 66 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும்.
விவசாயத்தை பொறுத்த வரை தென்னை, மா, பலா, வாழை, கரும்பு, நெல், உள்ளிட்ட அனைத்து பயிர்களும் மிக அதிகமாக சேதமடைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதவிபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதுடன் உரிய நிவாரணம் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story