புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் நிவாரண உதவி
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
கந்தர்வகோட்டை,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 21-ந்தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கினார்.
இந்நிலையில் நேற்று அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அவர் திருச்சியில் இருந்து செங்கிப்பட்டி வழியாக கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டி கிராமத்திற்கு சென்றார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, பருப்பு, போர்வை, சேலை உள்ளிட்ட 9 பொருட்கள் அடங்கிய பாக்கெட்களை வழங்கினார். 350 மாற்றுத்திறனாளிகள் உள்பட 700 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டியில் காலை 8 மணிக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காலை 8 மணியிலிருந்து கந்தர்வகோட்டை இந்திராநகர், குமரன்காலனி, அக்கச்சிப்பட்டி பொதுமக்கள் சாலையில் கூட்டமாக திரண்டிருந்தனர். ஆனால் கமல்ஹாசன் 12 மணிக்கு தான் வந்தார். மேலும் அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதாததால் பொதுமக்கள் தள்ளு-முள்ளுவில் ஈடுபட்டனர். சிலர் நிவாரணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தொடர்ந்து கமல்ஹாசன் அக்கச்சிப்பட்டியில் இருந்து கறம்பக்குடி அருகே உள்ள பந்துவாக்கோட்டைக்கு காரில் சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மேடை அமைத்து, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஆனால் கமல்ஹாசன் பள்ளிக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து, மாணவர்கள் படிப்பை தொந்தரவு செய்யக்கூடாது எனக்கூறி பள்ளி வளாகத்திற்குள் நுழைய மறுத்து, சாலையில் நின்ற தனது, காரில் ஏறி நின்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு சில நிமிடம் பேசினார்.
அதன் பின்னர் கமல்ஹாசன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story