அசுத்தம் அதிகம் உள்ளது: ஒரு வாரத்துக்குள் மெரினாவில் மாற்றம் வரவேண்டும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


அசுத்தம் அதிகம் உள்ளது: ஒரு வாரத்துக்குள் மெரினாவில் மாற்றம் வரவேண்டும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 1 Dec 2018 1:32 AM IST (Updated: 1 Dec 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

அசுத்தம் அதிகம் உள்ளது: ஒரு வாரத்துக்குள் மெரினாவில் மாற்றம் வரவேண்டும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

சென்னை, 

மெரினா கடற்கரையில் அசுத்தம் நிறைந்துள்ளதாகவும், அவற்றை எல்லாம் சுத்தம் செய்து ஒரு வாரத்துக்குள் அங்கு மாற்றம் வரவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியான கருத்தை தெரிவித்து உள்ளது.

மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீன் பிடிபடகுகள் எல்லாம் முன் அனுமதியை பெறவேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவினால், நாடு முழுவதும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால், மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மதனகோபாலராவ், ‘ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் அனைத்து படகுகளும் முன் அனுமதி பெறவேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்று விட்டது’ என்று கூறி, அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மவுரியாவிடம், ‘இந்த ஐகோர்ட்டில் நிவாரணம் கேட்கும் மீனவர்கள் அமைப்புகள், இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும். மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம் செல்லும் சாலை முழுவதும் அசுத்தமாக உள்ளது. அதை ஏன் சுத்தப்படுத்தக்கூடாது? கடற்கரையில் தான் மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் அந்த பகுதியை சுத்தமாக வைத்திருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

நீதிபதி வினீத் கோத்தாரி, ‘நான் தமிழகத்துக்கு புதியவன். மெரினா கடற்கரை அழகான கடற்கரை என்று முன்பு சொல்வார்கள். நான் காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோது, கடற்கரை முழுவதும் அசுத்தமாக உள்ளதை கண்டேன், அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. எனவே, ஒரு வாரத்துக்குள் மெரினா கடற்கரையில் மாற்றம் வரவேண்டும். உங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் அந்த பகுதியை சுத்தமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கருத்து கூறினார்.

Next Story