விதிமீறல் நடந்ததாக வழக்கு: ஆசிரியர் கலந்தாய்வு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


விதிமீறல் நடந்ததாக வழக்கு: ஆசிரியர் கலந்தாய்வு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:45 AM IST (Updated: 1 Dec 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதலில் விதிமீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கலந்தாய்வு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

மதுரை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பொது கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெறலாம் என்று கடந்த 2016-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இடமாறுதல் கேட்பதற்காக காரணத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான பொது கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை இடமாற்றம் செய்துள்ளனர். விதிகளை மீறி ஏராளமான இடமாறுதல்கள் நடந்துள்ளன. இதற்காக லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல கோடிகளை எட்டும்.

ஒரு மாவட்டத்தில் அதிக நாட்கள் பணியாற்றுபவர்கள் தான் இடமாறுதலுக்கு முன்னுரிமை பெற்றவர்கள். 10 ஆண்டுகளாக பிற மாவட்டங்களில் பணியாற்றி, சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் கிடைக்காமல் ஏராளமான ஆசிரியர்கள் தவிக்கிறார்கள். ஆனால் வெறும் 5 மாதம் மட்டும் வெளியூர்களில் வேலை பார்த்துவிட்டு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டத்துக்கு மாறுதல் பெற்று பலர் வந்துள்ளனர். கல்வித்துறையில் இடமாறுதல்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு பதவி உயர்வுகளையும் லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளனர்.

வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடக்கும் பொது இடமாறுதல் நடவடிக்கை ஆசிரியர்களின் நலனை பாதிப்பதாக அமைந்துள்ளது.

மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுவது போல, ஆசிரியர்களின் நலனுக்காகவும் அரசு அக்கறை காட்டுவது அவசியம். லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கியது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், எந்த பலனும் இல்லை.

கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் இந்த ஆண்டு நடந்த ஆசிரியர்களின் பொது இடமாறுதல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆசிரியர் பொது இடமாறுதலில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் விவரம், அவர்கள் இடமாறுதலுக்கு முன்னதாக பணிபுரிந்த விவரம், இடமாறுதல் கேட்டதற்கான காரணம் உள்ளிட்டவற்றை தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வருகிற 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story