ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் அமெரிக்கா நாட்டு செயற்கைகோள்களால் ஓசோன் படலம் பாதிப்பா? இஸ்ரோ தலைவர் கே.சிவன் மறுப்பு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் அமெரிக்கா நாட்டு செயற்கைகோள்களால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறதா? என்று கேட்டதற்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் மறுத்தார்.
சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த செயற்கைகோள்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்திவருகிறது. இதுவரை 69 ராக்கெட்டுகள் மூலம் 300-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு உள்ளன.
அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மட்டுமே இதுவரை செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்கு செயற்கைகோள்களை அனுப்பியுள்ளன. மங்கள்யான் விண்கலத்தை 2013-ம் ஆண்டு விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோவும் அந்த வரிசையில் இணைந்தது. இதுபோன்ற செயற்கைகோள்களை விண்ணுக்கு அடிக்கடி செலுத்துவதால் பருவநிலையில் மாற்றம் மற்றும் ஓசோன் படலம் பாதிப்பு போன்றவை ஏற்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:-
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் 29-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டது. அப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணுக்கு அதிகளவு செலுத்துவதால் ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள சூலூர்பேட்டையில் மழை பெய்யவில்லை என்று விவசாயிகள் கூறுவதாக என்னிடம் தெரிவித்தனர்.
அதுபோன்று எதுவும் இல்லை. மழை பெய்யாததற்கு காரணம் காலநிலை மாற்றம் தானே தவிர, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு செலுத்துவதால் மழை பெய்யவில்லை என்று கூறவது தவறானதாகும். மழை மேகங்களில் இருந்து தான் பொழிகிறது. ராக்கெட் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் செல்வதால் மழைக்கும் ராக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் ராக்கெட் மீது பழிசுமத்தாதீர்கள் என்றேன்.
அதேபோன்று தற்போது, அமெரிக்கா போன்ற நாடுகளின் செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படுவதால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது? என்று கூறுவதும் சரியல்ல. அமெரிக்கா நாட்டில் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப நம்மைவிட பல நவீன வசதிகள் அங்கு இருந்தும் ஏன் இங்கு வந்து அனுப்புகிறார்கள் என்று கேட்டால், இஸ்ரோ நவீன தொழில்நுட்பத்தில் ராக்கெட்டுகளை அனுப்புவதால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் தான். எனவே இதனை திட்டவட்டமாக மறுக்கிறேன். மேலும் சர்வதேச அளவில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக்கு நம்பகத்தன்மை உள்ளது.
செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உலக அளவில் இணையதளம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. அதில் இந்த வசதி உள்ள நாடுகள் பங்கேற்று அதற்கான கட்டணத்தை தெரிவிக்கின்றன. அதில் குறைவான கட்டணத்தை குறிப்பிடும் நாட்டுக்கே செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப அளிக்கின்றனர்.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் நியாயமான கட்டணத்தில், பாதுகாப்பான முறையில் செயற்கைகோள்கள் அனுப்பப்படுவதால் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் நம்மிடம் அந்த பணியை தருகின்றன. இந்தியா மட்டுமின்றி ரஷியா, பிரான்சு போன்ற நாடுகளும் வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story