1½ கோடி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் தமிழக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது


1½ கோடி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் தமிழக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 1 Dec 2018 12:15 AM GMT (Updated: 2018-12-01T01:59:12+05:30)

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ திட்ட காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் ஒரு கோடியே 58 லட்சம் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.

சென்னை,

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 11.1.2012 அன்று முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் நபர்கள் ரூ.5 ஆயிரத்து 133.33 கோடி அளவுக்கு பயன் அடைந்துள்ளனர்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகையினை, மேலும் உயர்த்தி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து, ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகையினை ரூ.5 லட்சம் ஆக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். அதன்படி 1.12.2018 (இன்று) முதல் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story