திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்: ஜாக்டோ -ஜியோ அறிவிப்பு, முதல்வரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு
திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் டிசம்பர் 4 -ம் தேதி முதல் நடைபெறும் என்று ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்
சென்னை,
புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்குப் பிறகு வழங்கப்படாமல் இருக்கும் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலை நிறுத்தம் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெறும் நிவாரணப்பணிகளை பாதிக்கும். ஜாக்டோ -ஜியோவின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும் என முதல் அமைச்சர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதற்கு மத்தியில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று கூடியது. கூட்டத்துக்கு பிறகு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினோம். 7 அம்ச கோரிக்கைகள் குறித்து 20 ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் எடுத்துக்கூறினோம்.
கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளிக்கவில்லை. திட்டமிட்ட படி டிசம்பர் 4 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடரும். டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் போராட்டத்தை கைவிடுவது பற்றி பரிசீலனை செய்யப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story