முதல்-அமைச்சரின் வேண்டுகோள் நிராகரிப்பு: திட்டமிட்டபடி 4-ந்தேதி முதல் தொடர் போராட்டம் ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவிப்பு


முதல்-அமைச்சரின் வேண்டுகோள் நிராகரிப்பு: திட்டமிட்டபடி 4-ந்தேதி முதல் தொடர் போராட்டம் ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:45 AM IST (Updated: 2 Dec 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி 4-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்று ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவித்தது.

சென்னை

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி 4-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்று ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவித்தது. இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை அந்த அமைப்பு நிராகரித்துள்ளது.

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தவேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்கவேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவித்திருந்தது.

இதையடுத்து ‘ஜாக்டோ- ஜியோ’ நிர்வாகிகளோடு அமைச்சர் ஜெயக்குமார், அரசு செயலாளர் சுவர்ணா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி உறுதி எதுவும் கொடுக்கவில்லை என்பதால் உயர்மட்ட குழுவில் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘ஜாக்டோ-ஜியோ’ நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

‘ஜாக்டோ-ஜியோ’ போராட்டம் நடத்தினால் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினர் தங்களுடைய போராட்டத்தை கைவிடவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் ‘ஜாக்டோ-ஜியோ’ உயர்மட்ட குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. இதில் ‘ஜாக்டோ-ஜியோ’ நிர்வாகிகள் பங்கேற்று தங்களுடைய அடுத்தகட்ட நகர்வு குறித்து விவாதித்தனர். போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்தனர்.

உயர்மட்ட குழு கூட்டத்துக்கு பின்னர் ‘ஜாக்டோ-ஜியோ’ ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களுடைய 7 அம்ச கோரிக்கைகளை நேற்று (நேற்று முன்தினம்) அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அரசு தரப்பிடம் மிகவும் தெளிவாக எடுத்து கூறினோம். ஆனால் அவர்கள் எங்களை அவமதிக்கும் வகையில் பதில் அளித்ததால் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை.

இதனால் டிசம்பர் 4-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். 4-ந் தேதி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளான 5-ந் தேதியன்று அவரது படத்தை ஏந்தியவாறு போராட்டம் நடத்துவோம்.

6-ந்தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதற்கு பின்னரும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் 7-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். இதேபோல மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபடுவோம். எங்களுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது.

4-ந்தேதிக்கு முன்பு அழைத்து பேசினால் போராட்டத்தில் ஈடுபடும் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்வோம். எனவே எங்களை அழைத்து பேசி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘ஜாக்டோ-ஜியோ’ போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர்.

Next Story