ஆவடி அருகே, கணவன்-மனைவி கொலை: தலைமறைவான வாலிபர், ஆந்திராவில் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் பரபரப்பு தகவல்கள் அம்பலம்
ஆவடி அருகே கணவன்-மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஆந்திராவை சேர்ந்த சுரேஷ்குமார், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்து உள்ளது.
ஆவடி,
ஆவடியை அடுத்த சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 67). இவருடைய 2-வது மனைவி விலாசினி (58). இருவரும் சென்னையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்த கணவன்-மனைவி இருவரும் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மர்மநபர்கள், இரும்பு குழாயால் இருவரின் தலையிலும் தாக்கி கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இவர்களுக்கு உதவியாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28), தனது மனைவி லட்சுமி (22), மகன் சதீஷ் (3) ஆகியோருடன் அங்கேயே தங்கி இருந்தார். கொலை சம்பவத்துக்கு பிறகு சுரேஷ்குமார் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
எனவே அவர்தான் இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல பரபரப்பான தகவல்களை தனிப்படை போலீசார் வெளியிட்டனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
சுரேஷ்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வயதான தனது வளர்ப்பு தாயுடன் அவர் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. இதனால் சுரேஷ்குமார் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது. விசாகப்பட்டினம் சென்றுள்ள தனிப்படை போலீசார் அங்கு அவரைப்பற்றி விசாரித்தனர்.
அதில் சுரேஷ்குமார் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளது. 11-07-2017 அன்று ஒரு வழக்கு சம்பந்தமாக விசாகப்பட்டினம் போலீசார், அங்குள்ள கோர்ட்டுக்கு சுரேஷ்குமாரை அழைத்து வரும்போது அவருடன் பாதுகாப்புக்காக சென்ற போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அன்றில் இருந்து சுரேஷ்குமாரை விசாகப்பட்டினம் போலீசார் தேடி வருகின்றனர். அங்கிருந்து தலைமறைவான சுரேஷ்குமார், சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
அதன்பிறகுதான் ஜெகதீசன் வீட்டில் வந்து தங்கினார். அப்போது இருவரும் தனியாக இருப்பதை சாதகமாக்கிக்கொண்டு கணவன்-மனைவியை அடித்துக்கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இவ்வாறு தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள சுரேஷ்குமாரின் புகைப்படங்களை தனிப்படை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
சுரேஷ்குமார் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக உள்ளாரா? அல்லது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதுங்கி உள்ளாரா? என தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால்தான், இரட்டை கொலை, கொள்ளைக்கான காரணம் என்ன?. எவ்வளவு கொள்ளை போனது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story