கஜா புயல் தாக்கிய பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் கமல்ஹாசன் பேட்டி


கஜா புயல் தாக்கிய பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2018 1:15 AM IST (Updated: 2 Dec 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் தாக்கிய பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் கமல்ஹாசன் பேட்டி

சேதுபாவாசத்திரம், 

கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம், பள்ளத்தூர், செருபாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை நேற்று பார்வையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அதிராம்பட்டினத்துக்கு சென்ற கமல்ஹாசன், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு, ஏரிப்புறக்கரை, கரையூர்தோப்பு மற்றும் பிள்ளையார் கோவில் பகுதிகளை பார்வையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மகிழங்கோட்டைக்கு வந்த கமல்ஹாசன் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புயல் பாதிப்பால் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி மக்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க ஒரு அமைச்சரிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர், இந்த பகுதிகளில் அதிக பாதிப்பு இல்லை என கூறி விட்டார். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகுதான் இப்பகுதியில் உள்ள சேதத்தின் அளவு தெரிகிறது. எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் உங்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை அரசு சார்பில் செலுத்தப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு அந்த பெண்கள், தங்களுக்கு எந்த நிவாரண தொகையும் இதுவரை வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என தெரிவித்தனர்.

Next Story