ஆசிரியர் இடமாறுதலுக்கு ரூ.7 லட்சம் பேரம் ‘வாட்ஸ்-அப்’ உரையாடலால் பரபரப்பு


ஆசிரியர் இடமாறுதலுக்கு ரூ.7 லட்சம் பேரம் ‘வாட்ஸ்-அப்’ உரையாடலால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 2 Dec 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு ரூ.7 லட்சம் பேரம் பேசுவது தொடர்பாக ஆசிரியர்கள் உரையாடல் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதலில் விதிமீறல் நடந்ததாக மதுரை ஐகோர்ட்டில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், விதிகளை மீறி இடமாறுதல் நடப்பதாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளிப்பதாகவும் கூறிஇருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியர் கலந்தாய்வு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு ரூ.7 லட்சம் வரை பேரம் பேசியது தொடர்பான உரையாடல் அடங்கிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், திருச்செந்தூரை சேர்ந்த மற்றொரு அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் இடமாறுதலுக்கு லஞ்சம் வழங்குவது குறித்து பேசுவதாக உரையாடல் அமைந்திருக்கிறது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

எட்டயபுரம் ஆசிரியர்:- அண்ணே, அந்த கெமிஷ்டிக்கு அனுப்பி விடுங்க, அடிஷனல் போஸ்டில் திங்கட்கிழமை ஆர்டர் தருவதாக சொல்கிறார்கள்.

திருச்செந்தூர் ஆசிரியர்:- அப்படியா, எவ்வளவு?

எட்டயபுரம் ஆசிரியர்:- 7 ரூபா சொல்கிறார்கள் (ரூ.7 லட்சம்).

திருச்செந்தூர் ஆசிரியர்:- ஏ யப்பா, சரி, நான் அவங்களிடம் ஸ்கூலில் வைத்து பேசுகிறேன்.

எட்டயபுரம் ஆசிரியர்:- சரி நீங்க பேசுங்க. அப்படி இல்லையென்றால் நைட் அனுப்புங்க. காலையில் அடிஷனலா தருவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆர்டர் திங்கட்கிழமை கிடைக்கும்.

திருச்செந்தூர் ஆசிரியர்:- நான் அவரிடம் பேசுறேன். பைசா எவ்வளவு வைத்து இருக்கிறார் என்று தெரியவில்லை. பார்ப்போம். நேற்று அவரின் கணவர் வந்தார். அவர் வேலை இல்லாமல் இருக்கிறார். அவர் என்னிடம் இதுகுறித்து சொன்னார். அதனால்தான் உங்களிடம் சொன்னேன். நாளைக்கு பள்ளி வரும் போது இதுகுறித்து சொல்றேன்.

எட்டயபுரம் ஆசிரியர்:- அப்டினா நாளைக்கு காலையில் எனக்கு அனுப்ப வேண்டும். 10 மணிக்குள் மெசேஜ் அனுப்ப வேண்டும். ஏன் என்றால் சென்னை சென்ற ஆள் அங்கு இருந்து எல்லாம் பார்த்து வாங்கிட்டு அதன் பின்னர் தான் வருவார்.

திருச்செந்தூர் ஆசிரியர்:- அந்த ஆள் எந்த அளவுக்கு ஸ்பீடில் இருப்பார் என்று தெரியவில்லை. நீங்கள் சொன்ன அளவுக்கு இருப் பாரானு, தெரியல.

எட்டயபுரம் ஆசிரியர்:- இப்போ நாம போற வழினே, ஒரு ஐ.ஏ.எஸ். மூலமா போய்கிட்டு இருக்கோம். அந்த லைன் வந்து, சொன்னா கரெக்டா இருக்கும். யாரும் உருவ முடியாது.

திருச்செந்தூர் ஆசிரியர்:- இது ஆபிஸ் வழியாவா? அரசியலா?

எட்டயபுரம் ஆசிரியர்:- ஆபிஸ் வழியா தான் போகுது. அதுவும் ஒரு ஐ.ஏ.எஸ். வாங்கி கொடுக்காரு.

திருச்செந்தூர் ஆசிரியர்:- ஓ. அப்போ அவருக்கும் கமிஷம் போய்ரும்.

எட்டயபுரம் ஆசிரியர்:- ஆமா, அவங்க வந்து செக்கரேட்டிரியட்ல இருந்து சொல்லும் போது போட்டு தான் ஆவாங்க. வேற வழி இல்ல.

திருச்செந்தூர் ஆசிரியர்:- ஆமா நீங்க ஆள் போவுதுனு சொல்றீங்க சரி. அந்த ஆளு அவரு நாளைக்கு கேட்டு சொல்லுங்கனு சொன்னாரு. அவரு பட்டணத்துல இல்ல. வெளியதான் இருக் காரு. ஸ்கூலுக்கு வருவாரு. என்ன?.

எட்டயபுரம் ஆசிரியர்:- சரி ஆட்டும் ஆட்டும்...

திருச்செந்தூர் ஆசிரியர்:- நாளைக்கு எப்படியும் ஸ்கூலுக்கு போவேன் போய் கேட்கிறேன்.

எட்டயபுரம் ஆசிரியர்:- சரி நீங்க போன பிறகு எனக்கு அனுப்புங்க. ஓகே.ஓகே. குட் நைட்.

இவ்வாறு அந்த உரையாடல் முடிவடைகிறது.

இந்த வாட்ஸ்-அப் ஆடியோ தமிழகம் முழுவதும் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Next Story