தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:45 PM GMT (Updated: 2018-12-02T01:19:17+05:30)

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கால தொடக்கத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தது. ஆனால் அதன் பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

கிழக்கு நோக்கி வீசும் பருவ காற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வலுவின் காரணமாக காற்றில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய சூழலில் கன மழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் அதன் அடுத்தகட்ட நகர்வுகளை பார்த்த பின்னர் தான் அதனை உறுதி செய்யமுடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பாபநாசம், அம்பாசமுத்திரத்தில் தலா 4 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. குன்னூர், ஆய்க்குடி, தென்காசி, கொடைக்கானலில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Next Story