பட்டேல் சிலைக்கு ரூ.3000 கோடியாம்,புயலால் பாதித்த தமிழர்களுக்கு ரூ.350 கோடியாம் - கனிமொழி எம்.பி டுவீட்
பட்டேல் சிலைக்கு ரூ.3000 கோடியாம்,புயலால் பாதித்த தமிழர்களுக்கு ரூ.350 கோடியாம் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை,
வங்க கடலில் உருவாகி தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் கடந்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. புயலின் தாக்குதலில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பேரழிவு ஏற்பட்டது. . புயல்-மழைக்கு 63 பேர் பலியாகினர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அரசாங்கத்தின் சார்பிலும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் சார்பிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.1,000 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
டெல்லி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந் தேதி பிரதமர் மோடியை சந்தித்து, புயல் சேத விவரங்களை தெரிவித்து, நிவாரண பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அத்துடன் புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்குமாறு கூறினார்.
இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் தமிழகம் வந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்றனர்.
இதற்கிடையே, மின்சார துறை மந்திரி தங்கமணி கடந்த 25-ந் தேதி மின்சார சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.353 கோடியே 70 லட்சம் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்து இருக்கிறது. இது 2018-2019-ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்களிப்பாக வழக்கப்படும் 2-வது தவணை தொகை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் திமுக எம்.பி கனிமொழி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! என பதிவிட்டுள்ளார்.
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! #GajaCycloneRelief
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 2, 2018
Related Tags :
Next Story