சென்னையில் 5-ந் தேதி ஜெயலலிதா நினைவு நாள் அமைதி பேரணி ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஜெயலலிதா நினைவு நாள் அமைதி பேரணி சம்பந்தமாக அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் 5-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில், அண்ணா சாலை-அண்ணா சிலை அருகில் இருந்து நினைவு அமைதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அமைதி பேரணி சம்பந்தமாக விவாதிப்பதற்காக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணியை நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும், மெரினா கடற்கரையில் நடக்கும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story