மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள்கள்: டி.டி.வி.தினகரன் கண்டனம்


மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள்கள்: டி.டி.வி.தினகரன் கண்டனம்
x
தினத்தந்தி 3 Dec 2018 1:45 AM IST (Updated: 3 Dec 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள்கள்: டி.டி.வி.தினகரன் கண்டனம்


சென்னை, 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு மாணவர்களின் நலன்காக்க இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாக பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் திட்டத்தை கொண்டுவந்து அதை மிகுந்த கவனத்தோடு நடைமுறைப்படுத்தினார்.

இதனைப் பின்பற்றி கர்நாடகாவிலும் விலையில்லா சைக்கிளை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. சமீபத்தில் கர்நாடக அரசின் சார்பில் அப்படி வழங்கப்பட்ட சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அந்த சைக்கிள்களை அம்மாநில அரசு நிராகரித்துள்ளது. நிராகரிக்கப்பட்ட அந்த சைக்கிள்களை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பகுதியைச் சேர்ந்த 9 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கியதாக செய்தி வந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஜெயலலிதா, மாணவர்களின் நலனுக்காக முன்னெடுத்த உன்னத திட்டத்தை, அ.தி.மு.க. அரசு மிகவும் அலட்சியத்தோடு நடைமுறைப்படுத்தும் முறையால், பயன்பெறும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணையை இந்த அரசு உடனடியாக மேற்கொண்டு, இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story