நாடார் சமுதாயத்தை இழிவுப்படுத்தி கருத்து: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் தீர்மானம்


நாடார் சமுதாயத்தை இழிவுப்படுத்தி கருத்து: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 3 Dec 2018 4:15 AM IST (Updated: 3 Dec 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

நாடார் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் கருத்தை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து மத்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்று நாடார் மக்கள் சக்தி உண்ணாவிரத போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, 

சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு வரலாறு பாட புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை விமர்சிக்கும் பகுதியை உடனடியாக நீக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் மக்கள் சக்தி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி நாடார் தலைமை தாங்கினார். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் ஜெ.முத்துரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், அ.ம.மு.க. சார்பில் வெற்றிவேல், பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம், வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், த.மா.கா. சார்பில் துணை தலைவர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், நாடார் மக்கள் சக்தி நிறுவனத் தலைவர் ஜெ.ராக்கெட் ராஜா, எஸ்.எஸ்.எஸ்.சிங் நாடார், தெட்சணமாற நாடார் சங்கத்தின் தலைவர் காளிதாஸ், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ், காமராஜர் பேத்தி மயூரி, காமராஜர் ஆதித்தனார் கழகத் தலைவர் சிலம்பு சுரேஷ், சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார், சினிமா சண்டை பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், கனல் கண்ணன், திரைப்பட நடிகர்கள் விஜய் வசந்த், மயில்சாமி, இமான் அண்ணாச்சி, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:-

2013-ம் ஆண்டு இப்பிரச்சினை எழுந்த போது, சேர, சோழ, பாண்டியர் வம்சத்தின், குலத்தோன்றல்கள் நாடார் சமுதாயம் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதிவு செய்தார்.

இப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து குறிப்பிட்ட பாடப்பகுதியை எடுப்பதாக கூறி இருக்கிறார்கள். அந்த பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு எழுத்துக் கூட இல்லாமல் இருப்பதற்கு தமிழக அரசு சார்பில் முயற்சி எடுக்கப்படும்.

எந்த சமுதாயத்துக்கும் இழிவு நேர்ந்தாலும், அதை துடைப்பதற்கு நீளும் முதல் கரம் ஜெயலலிதாவின் அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் சில வருமாறு:-

* சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் பற்றிய வரலாற்று பொய் செய்திகளை முழுமையாக வரும் கல்வி ஆண்டில் மத்திய அரசு நீக்க வேண்டும்.

* மத்திய அரசின் உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்.

* தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக ரெயில்கள் இயக்க வேண்டும். திருச்செந்தூர் பகுதிக்கு ‘குலசை எக்ஸ்பிரஸ்’ எனும் பெயரில் புதிய ரெயிலை இயக்க வேண்டும்.

* தென்னை மரத்தின் நீரா பானத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது போன்று பனைமர நீரா பானத்துக்கும் அனுமதி வழங்கிட வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உண்ணாவிரத போராட்டத்தை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

Next Story