அந்தியூர் அருகே பயங்கரம்: கோவிலில் தூங்கிய 2 பேர் அடித்துக்கொலை தொழிலாளி வெறிச்செயல்
அந்தியூர் அருகே கோவிலில் தூங்கிய 2 பேரை அடித்துக்கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கொன்னமரத்து அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளியாக இருந்து வந்தவர் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 50).
டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் போர்வை வியாபாரி கந்தசாமி (50). அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்தவர் வெற்றிலை வியாபாரி பெரியசாமி (51). வியாபாரம் செய்வதற்காக அந்தியூருக்கு வந்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலில் படுத்து தூங்கினார்கள். அருகிலேயே வடிவேலும் தூங்கினார்.
நள்ளிரவில் அங்கு வந்த ஆப்பப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி நல்லசாமி (42) என்பவர் கோவில் வளாகத்தில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து தூங்கிக்கொண்டு இருந்த பெரியசாமியை தாக்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து எழுந்த அவர் அலறியபடி அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத நல்லசாமி, வடிவேலையும், கந்தசாமியையும் தலையில் கட்டையால் அடித்ததாக தெரிகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற நல்லசாமி, அந்தியூர் புதுப்பாளையம் வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியில் நின்றுகொண்டு இருந்த குமார் என்பவரிம் பணம் தரும்படி மிரட்டி அவரை கத்தியால் குத்தினார். இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நல்லசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது தோட்டத்துக்குள் மறைந்திருந்த பெரியசாமி அங்கு இருந்து ஓடி வந்து ‘நல்லசாமி என்னை கட்டையால் தாக்கினார்’ என்று பொதுமக்களிடம் கூறினார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீசார் படுகாயம் அடைந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியபோது, மனைவி ஜானா பிரிந்து சென்றுவிட்டதால் அந்த கோபத்தில் 2 பேரை அடித்து கொன்றதாக நல்லசாமி தெரிவித்தார். இதனை தொடர்ந்துதான் போலீசார் கொன்னமரத்து அய்யன் கோவிலுக்கு சென்று கந்தசாமி மற்றும் வடிவேலுவின் உடலை மீட்டனர். தொடர்ந்து நல்லசாமியை கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் வடிவேலுவின் உறவினர்கள், இருவரின் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி முன் திரண்டனர்.
இருவரையும் கொலை செய்த நல்லசாமியை அடித்தே கொல்ல வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் அதுவரை உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என கூறினார்கள். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story