பிரசவத்தின்போது தாய், குழந்தை பலி: ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்- செவிலியர் மீது விசாரணை
பிரசவத்தின்போது தாய், குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது விசாரணை நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 23). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா பிரசவத்துக்காக விஜயமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த நவம்பர் 28-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக காஞ்சனாவை விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள்.
அங்கு டாக்டர் விஜயசித்ரா பரிசோதனை செய்தபோது காஞ்சனாவுக்கு லேசான வலி மட்டுமே இருந்தது. எனவே முழுமையான வலி வரும்வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும்படி கூறினார். அதன்படி காஞ்சனா அங்கு இருந்தார். மாலையில் காஞ்சனாவுக்கு கடுமையான வலி வந்தது. அப்போது பணி நேரம் முடிந்து டாக்டர் வெளியே சென்றுவிட்டார். செவிலியர் சுகன்யா என்பவர் மட்டுமே பணியில் இருந்தார். அவர் காஞ்சனாவுக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார்.
குழந்தையின் தலை பாதி வெளியேவந்த நிலையில் பின்னர் எந்த அசைவும் இல்லாமல் நின்றுவிட்டது. இதனால் பிரசவம் சிக்கலானதாக மாறியது. செவிலியர் சுகன்யாவுக்கு உதவிக்கு வேறு யாரும் இல்லை. எனவே அருகில் உள்ள வேறு சுகாதார நிலையங்களுக்கு காஞ்சனாவை கொண்டுசெல்ல முயற்சித்தார்.
அருகில் உள்ள திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காஞ்சனாவை மிக ஆபத்தான நிலையில் செவிலியர் அனுப்பிவைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கும் டாக்டர்கள் யாரும் இல்லை. உடனே ஆம்புலன்சு மூலம் காஞ்சனா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே காஞ்சனா பரிதாபமாக இறந்தார். பல மணி நேரமாக துடித்துக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக பலியானது. தாயும், குழந்தையும் மரணம் அடைந்த தகவல் காஞ்சனாவின் உறவினர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்தது.
விஜயமங்கலம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் விஜயசித்ரா, செவிலியர் சுகன்யா ஆகியோர் மீது காஞ்சனாவின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். முதலிலேயே ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று இருந்தால்கூட தாயையும், குழந்தையையும் காப்பாற்றி இருக்க முடியும். பணியில் அலட்சியமாக இருந்து தாய் மற்றும் குழந்தை பலிக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, “இதுதொடர்பாக ஆரம்பசுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது துறைரீதியாக விசாரணை நடந்துவருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அதன்பேரில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story