திண்டுக்கல் எம்.பி.- ரெயில்வே ஊழியர் மோதல் கொடைரோடு அருகே பரபரப்பு
கொடைரோடு அருகே திண்டுக்கல் எம்.பி.- ரெயில்வே ஊழியர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைரோடு,
திண்டுக்கல் எம்.பி.யாக இருப்பவர் உதயகுமார். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் நேற்று வந்து கொண்டிருந்தார். அவருடைய கார் கொடைரோடு அடுத்த அழகம்பட்டி ரெயில்வே கேட் அருகே வந்தபோது, அந்த வழியாக பயணிகள் ரெயில் சென்றது.
இதன் காரணமாக ரெயில்வே கேட் மூடப்பட்டது. அதன் அருகே உதயகுமார் காரை நிறுத்தி விட்டு காத்திருந்தார். அங்கு கேட் கீப்பர் மணிமாறன் பணியில் இருந்தார். ரெயில் சென்ற பிறகும் அவர் கேட்டை திறக்காமல் காலதாமதம் செய்ததாக கூறி உதயகுமார் எம்.பி., மணிமாறனை சத்தம்போட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது உதயகுமாரும், மணிமாறனும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற உதயகுமார், அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில், ரெயில்வே ஊழியர் மணிமாறன் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார். அதை தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக உதயகுமார் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு இடையே அதே ரெயில்வே கேட்டில் மணிமாறன் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பயணிகள் ரெயில் வந்தது. அந்த சமயத்தில் ரெயில்வே கேட்டை மணிமாறன் அடைக்காமல் விட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.
எம்.பி.- ரெயில்வே ஊழியர் இடையே நடந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story