அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு திருநாவுக்கரசர் பேட்டி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என திருநாவுக்கரசர் கூறினார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு போராட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான கோரிக்கைக்காக போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு ரூ.350 கோடி ஒதுக்கி இருக்கிறது. ரூ.15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அதைவிட 2 மடங்கு இழப்பு அதிகமாக இருக்கும். எனவே மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது. ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்ட மத்திய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கியது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமர் மற்றும் மந்திரிகள், அதிகாரிகளை அவர் சந்தித்து அனுமதியை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும். அதன் பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு யோசனை வழங்கலாம்.
மத்திய அரசு எல்லா மாநில அரசுகளுக்கும் நடுநிலையாக இருந்து முடிவு எடுக்க வேண்டும். நியாயமாக எது தேவை என்பதை முடிவு செய்ய தான் மத்திய அரசு உள்ளது. இதற்கு முன்பு மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தான் இருந்தார்கள். அப்போது இருந்த மத்திய அரசு அனுமதி தரவில்லையே.
காவிரியை தடுக்கிற விதத்தில் யார் அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அதை மீறி மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது. தமிழக மக்கள், விவசாயிகள் நலன் எங்களுக்கு முக்கியம். அந்த வகையில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் திருச்சியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story