7 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார் மனநலம் பாதித்த வடமாநில வாலிபரை குணப்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர் சென்னையில் உருக்கமான சம்பவம்
சென்னையில் சுற்றித்திரிந்த மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தாம்பரம்,
மத்தியபிரதேச மாநிலம், ஹர்சத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் குப்தா (வயது 36). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் 7 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த ஊரில் மாயமானார். பல ஊர்களில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த இவர் ரெயிலில் சென்னை வந்து பல பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 2-ந் தேதி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த இவரை திரிசூலத்தை சேர்ந்த ‘மனசு’ என்ற தொண்டு நிறுவன மனநல காப்பகத்தினர் மீட்டு சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் ஓம்பிரகாஷ் குப்தா குணமடைந்தார். அப்போது அவர் தன்னுடைய வீட்டு முகவரியை தெரிவித்தார்.
தேசிய அளவில் காணாமல்போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா உதவியுடன் ஓம்பிரகாஷ் குப்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவர் இறந்திருப்பார் என அவரது குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.
ஆனால் அவர் நன்றாக இருப்பதை அறிந்து ‘வீடியோ கால்’ மூலம் அவருடன் பேசினார்கள். அப்போது ஆனந்த கண்ணீர் வடித்து, தங்கள் மகனை நேரில் வந்து அழைத்துச்செல்வதாக தெரிவித்தனர். அதன்படி அவரது தந்தை அனில்குமார் குப்தா நேற்று காலை மத்தியபிரதேசத்தில் இருந்து திரிசூலத்திற்கு வந்தார். அவரிடம் இருந்த அனைத்து ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டது.
மனசு மனநல காப்பக இயக்குனர் சூசை ஆண்டனி, மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா முன்னிலையில் ஓம்பிரகாஷ் குப்தா அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். மகனை 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டுக்கொடுத்த அனைவருக்கும் அனில்குமார் குப்தா நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து ஆய்வாளர் தாஹீரா கூறுகையில், “ஏ.டி.ஜி.பி. சீமா அகர்வால் உத்தரவின் பேரில் காணாமல்போனவர்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை 140 பேர் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.
Related Tags :
Next Story