கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.
சென்னை,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சந்தித்து, மீன் வளர்ச்சிக்கழகத்தின் சார்பாக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால், மீன்வளத்துறை இயக்குனர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சபாநாயகர் ப.தனபால் சந்தித்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சட்ட பேரவை தலைவர், அரசு தலைமை கொறடா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நியமன உறுப்பினர் ஆகியோரது ஒரு மாத சம்பளத்தின் மொத்த தொகை ரூ.86 லட்சத்து 62 ஆயிரத்து 500-க்கான காசோலையை வழங்கினார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆர்.சேதுராமன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 543-க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில், சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்ய சுப்பிரமணியம் உடன் இருந்தார். சிங்கப்பூர் ஹனீபா பிரைவேட் லிமிட் நிறுவனத்தின் தலைவர் ஒ.கே.முகமது ஹனீபா, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் பி.சி.சந்திராயன், மேலாளர் ஜெ.சந்திரசேகரன் கலந்து கொண்டனர்.
சுந்தரம் பைனான்ஸ்
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சுந்தரம் பைனான்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவர் எஸ்.விஜி சந்தித்து முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியே 40 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.டி.ஸ்ரீனிவாசராகவன் உடன் இருந்தார்.
லூகாஸ் டி.வி.எஸ். லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் டி.கே.பாலாஜி சந்தித்து, முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் அக்னி சின்னுசாமி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
கம்யூனிஸ்டு உதவி
முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உடன் இருந்தார். தென் மண்டல பல்க் எல்.பி.ஜி. போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பொன்னம்பலம் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வழங்கினார். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்து 95 ஆயிரத்து 200-க்கான காசோலையை மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் வழங்கினார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பொது நிவாரண நிதி
சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் லியோ என்.சுந்தரம் முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மரகதம் குமாரவேல் எம்.பி., காஞ்சீபுரம் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆர்.சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராமலிங்கம் ஆகியோர் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
ரூ.48½ கோடி வசூல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக பொது மக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கிய தொகை 48 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 345 ரூபாயாகும். இன்று (நேற்று) மட்டும் 8 கோடியே 53 லட்சத்து 93 ஆயிரத்து 243 ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story