நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Dec 2018 2:58 AM IST (Updated: 4 Dec 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

சென்னை,


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-சேலம் இடையிலான 277 கிலோ மீட்டர் நீள பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட்டு தடைவிதித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ஐகோர்ட்டுக்கு அளித்த உறுதிமொழியை மீறி நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு அவசர, அவசரமாக வெளியிட்டது ஏன்?. பசுமை வழிச் சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் (அதாவது நாளை) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

திரும்பப் பெற வேண்டும்

அத்தகைய சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஐகோர்ட்டு அனுமதி பெற்று அறிவிக்கை வெளியிடுவது தான் சரியானதாக இருக்கும். அவ்வாறு செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டதில் இருந்தே, ஏதோ சில தனியார் நிறுவனங்களின் நலனுக்காக பசுமை வழிச் சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடியும்.

எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிக்கைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். அதுமட்டும் தான் மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story