தி.மு.க. அணியில் எந்த சலசலப்பும் இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி


தி.மு.க. அணியில் எந்த சலசலப்பும் இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2018 5:15 AM IST (Updated: 4 Dec 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அணியில் எந்த சலசலப்பும் இல்லை என மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து தி.மு.க. சார்பில் திருச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா நிவாரண பணிகளை முதல்-அமைச்சர் எல்லா இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு ‘டீ’ கடைகளில் ‘டீ’ குடிப்பது ஊரை ஏமாற்றுவதற்கு நடத்தும் நாடகம். அடிப்படையான நிவாரண பணிகளில் இந்த அரசு முழுமையாக இன்னும் ஈடுபடவில்லை என்பது தான் எங்களுடைய ஒட்டுமொத்த குற்றச்சாட்டு.

போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் இந்த ஆட்சியில் போராடுவது புதிது அல்ல. ஜாக்டோ-ஜியோ ஒரு பக்கம், விவசாயிகள் ஒரு பக்கம் போராடுகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து போராடி வருகிறார்கள்.

இதையெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே கமிஷன், கரெப்ஷன், கலெக்சன் என்ற அந்த நிலையில் தான் உறுதியாக இருக்கிறார்கள்.

சிலை திறப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலய வளாகத்தில் 16-ந் தேதி நடைபெற இருக்கிறது. என்னுடைய தலைமையில், பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில், சோனியாகாந்தி திறந்து வைக்க இருக்கிறார்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்க இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

வீண்பழி

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டேன். சில ஆங்கில ஊடகங்கள் திட்டமிட்டு வீண்பழி சுமத்தி தி.மு.க. தான் காரணம் என்று தவறான செய்தியை பரப்பி கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல.

வேறு யாரோ, அந்த கூட்டத்திற்குள் நுழைந்து களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே தி.மு.க. மீது, ஆர்ப்பாட்டத்தை நடத்தி கொண்டிருக்கின்ற கட்சிகள் மீது அபாண்டமான பழியை சுமத்துவதற்காக செய்யப்பட்டிருக்கக்கூடிய நாடகம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். தி.மு.க.வின் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை என்பது தான் உண்மை.

சலசலப்பு

அங்கீகரிக்கப்படாத சின்னம் இல்லாத கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென தி.மு.க. தரப்பில் மறைமுகமாக சொல்லப்பட்டதாக உங்களை போன்ற ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய சலசலப்பு தானே தவிர, எந்த சலசலப்பும் எங்களுடைய அணியில் இருக்கக்கூடியவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரியார் சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா? என்று கூறிய எச்.ராஜாவின் தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் நான் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story