ரஜினிகாந்த் கட்சி பெயரை எப்போது அறிவிப்பார்? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்
ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதாக அறிவித்து ஓராண்டு ஆகும் நிலையில், எப்போது கட்சி பெயரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சென்னை,
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்தி, ‘அரசியலுக்கு வருவேன்’ என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவரின் அரசியல் வருகையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ரஜினியின் அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தது.
அந்த அறிவிப்புடன் நின்று விடாமல், உடனடியாக மன்றங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில், ‘ரஜினி மக்கள் மன்றம்’ உருவாக்கி, நிர்வாகிகளை நியமித்தார். மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள் வரை ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார். இதனால் அவர் விரைவில் மாநாட்டை நடத்தி கட்சி பெயர், கொடி விவரங்களை வெளியிடுவார் என்று கருதப்பட்டது.
ஆனால், ரஜினிகாந்த் கட்சியின் பெயரை அறிவிக்காமல், புதிய படங்களில் நடிக்க மளமளவென ஒப்பந்தம் ஆனார். இது அவரது ரசிகர்களுக்கு ஒருவிதமான ஏமாற்றத்தை அளித்தது. அவரது நடிப்பில் இந்த ஆண்டு காலா, 2.0 வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பொங்கல் வெளியீடாக ‘பேட்ட’ படமும், அதன் பிறகு ஒரு புதிய படம் ஒன்றில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஓராண்டு ஆகிறது
தொடர்ந்து படங்கள் நடித்து வருவதால் ரஜினிகாந்த் கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார்? என்று அவரது ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இந்த மாதத்துடன் (டிசம்பர்) ஓராண்டு ஆகிறது. வரும் 12-ந்தேதி அவரது பிறந்தநாள் வருகிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாகவும், சிறப்பாகவும் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த பிறந்தநாளில் ரஜினிகாந்த் கட்சி பெயரை அறிவிப்பதற்கான தேதியை வெளியிடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கான சாத்தியகூறுகள் குறைவாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பொங்கலுக்கு பிறகே ரஜினிகாந்த் கட்சியின் பெயரை வெளியிடுவார் என்றே கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசும்போது, ‘நான் அரசியலில் இறங்குவது உறுதி. சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். நாடாளுமன்ற தேர்தல் குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்வோம்’ என்று தெரிவித்து இருந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு
தற்போதையை சூழ்நிலையில் வரும் ஏப்ரல், மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்தின் நிலைப்பாட்டை அறிய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் தனது மவுனத்தையே ரசிகர்களுக்கு பதிலாக தந்து கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், சட்டசபை தேர்தலுடன், கட்சியின் பெயரை வெளியிட்டு, தேர்தல் களத்தில் குதிக்க வேண்டும் என்பதே ரஜினிகாந்தின் எண்ணமாக இருப்பதாக தெரிகிறது.
இந்த ஓராண்டு இடைவெளிக்குள் அவ்வப்போது ரஜினிகாந்த் வெளியிட்ட சில அரசியல் கருத்துக்கள் பரபரப்பு தீயை பற்ற வைத்து, அரசியல் களத்தை சூடேற்றினாலும் அவரின் கட்சி பெயர் அறிவிப்பை ரசிகர்கள் வளையத்தையும் தாண்டி, அரசியல் கட்சிகளும் எதிர்நோக்கி காத்திருப்பதாகவே தெரிகிறது.
பிறந்தநாளில் அறிவிப்பு வருமா?
சமீபத்தில் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், ‘அரசியல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சவாலான, ஆபத்தான விளையாட்டு. இதை கவனமுடன் விளையாட வேண்டும். இதற்கு நேரம் மிக முக்கியமானது’ என்று தெரிவித்து இருக்கிறார். எனவே தன்னுடைய விளையாட்டை (அரசியல்) ஆரம்பிக்க, தகுந்த நேரம் பார்த்து காத்திருக்கும் ரஜினிகாந்த் அதை ரசிகர்களுக்கு தனது பிறந்தநாளில் வெளிப்படுத்துவாரா? என்பது தான் தற்போதைய கேள்வியாக எழுந்துள்ளது.
Related Tags :
Next Story