கஜா புயல் பாதித்த இடங்களை மறுகட்டமைப்பு செய்ய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் அரசாணை வெளியீடு
கஜா புயல் பாதித்த இடங்களை மறுகட்டமைப்பு செய்ய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த நவம்பர் 16-ந் தேதியன்று நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கஜா புயல் வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வீடுகள், குடிசைகள், விவசாய நிலங்கள், தோட்டக்கலை பயிர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் மக்களின் பல்வேறு வாழ்வாதாரங்களை அழித்துவிட்டது.
அந்த மாவட்டங்களில் மீன்வளம், தோட்டக்கலை, வேளாண்மை, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை மறுகட்டமைப்பு செய்யவும், மறுவாழ்வுக்காகவும் சிறப்புத் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இரண்டு அதிகாரிகள்
அந்த அறிவிப்பை அடுத்து, கஜா புயல் மறுகட்டமைப்பு, மறுவாழ்வு மற்றும் புதுப்பிப்பு திட்டம் (ஜி.ஆர்.ஆர்.ஆர்.பி.) என்ற திட்டத்தை வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு முன்மொழிந்தார். இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி ஆராய்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் டி.ஜெகநாதன், அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னையில் உள்ள ஜி.ஆர்.ஆர்.ஆர்.பி. திட்ட தலைமையக திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சப்-கலெக்டர் எம்.பிரதீப்குமார், நாகப்பட்டினத்தில் உள்ள ஜி.ஆர்.ஆர்.ஆர்.பி. தலைமையகத்தின் (நாகை மற்றும் திருவாரூர் நிர்வாக எல்லைகளை உள்ளடக்கியது) கூடுதல் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story