“ஜெயலலிதாவின் மன ரீதியான பாதிப்புகளே பிரச்சினைகளுக்கு காரணம்” விசாரணை ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம்
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி டாக்டரான சிவக்குமார் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் 6½ மணி நேரம் விசாரணை நடந்தது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து ஆணையம் முன்வைத்த கேள்விகளுக்கு டாக்டர் சிவக்குமார் பதில் அளித்தார். ஆவணங்களையும் சமர்ப்பித்தார். குறுக்கு விசாரணைக்கும் உட்பட்டார்.
அப்போது நீதிபதி ஆறுமுகசாமியிடம் டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
வெளிநாடு சிகிச்சை
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு முதல்முறையாக சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் ரிச்சர்டு பீலே, ‘ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லலாம்’, என்று கருத்து தெரிவித்தார். பின்னர் 2-வது தடவையாக வந்த டாக்டர் ரிச்சர்டு பீலே, ‘முன்பை விட ஜெயலலிதா உடல்நிலை பரவாயில்லை. எனவே தற்போது வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள தேவையில்லை’, என்று கூறினார்.
ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவது குறித்து தமிழக அமைச்சர்களிடம் எந்தவித விவாதமும் நான் மேற்கொள்ளவில்லை. அதுதொடர்பான ஆலோசனைகளிலும் நான் பங்கேற்கவில்லை. இதய வால்வு பிரச்சினையில் கூட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்து மருத்துவ வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தினோம். ‘இப்போதைய சூழ்நிலையில் அறுவை சிகிச்சை தேவையில்லை, தேவை ஏற்படும்போது செய்துகொள்ளலாம்’, என்று அவர்கள் பரிந்துரை செய்தனர்.
சோள உணவு
ஜெயலலிதாவுக்கு இதயம்-நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அதுசார்ந்த வல்லுனர்கள் தான் கவனம் மேற்கொண்டனர். நான் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர். எனவே என் சார்ந்த பணிகளில் நான் கவனத்தை மேற்கொண்டேன். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி காலை 11 மணியளவில் கார்ன் பிளாக்ஸ் (சோள உணவு) கேட்டார். ஆனால் அதை அவர் சாப்பிட்டாரா? என்பது எனக்கு தெரியாது. அன்றைய தினம் மதிய உணவுக்கு பின்னர் அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக, சசிகலா எனக்கு தகவல் தெரிவித்தார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு நல்ல சிகிச்சை தான் அளிக்கப்பட்டது. சசிகலா கணவர் நடராஜனை குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதித்தற்கு எந்த காரணமும் கிடையாது. அப்பல்லோ ஆஸ்பத்திரி சிகிச்சை குறித்து விமர்சிக்கப்படும் கருத்து தவறானது. ஏனென்றால் நடராஜன் ஏற்கனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் தான்.
குடும்ப முடிவு
குறிப்பாக குளோபல் ஆஸ்பத்திரியில் நடராஜன் அனுமதிக்கப்பட்டது, அவரது குடும்பத்தார் எடுத்த முடிவு. இதில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. தவிர அதுதொடர்பாக வேறு தகவல் எதுவும் எனக்கு தெரியாது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலகட்டங்களில் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தவிர வெளியில் இருந்து 19 டாக்டர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தார்கள்.
மேற்கண்டவாறு வாக்குமூலத்தில் டாக்டர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கால்...
டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம் குறித்து வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:-
டாக்டர் சிவக்குமார் நேற்று (நேற்று முன்தினம்) சாட்சியம் அளிக்கையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. போட்ட பொய் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் தன்னை மக்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற மன உளைச்சலால், ஜெயலலிதா பாதிக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கால் ஏற்பட்ட மனரீதியான பாதிப்புகள் தான் அவரது உடலில் பல பிரச்சினைகளை உருவாக்கியது. அதனால் தான் பல டாக்டர்களை நான் ஒருங்கிணைத்தேன்”, என்று குறிப்பிட்டார். தொடர்ந்து ஆணையம் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story