மேகதாதுவில் அணை கட்டினால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் வைகோ பேச்சு


மேகதாதுவில் அணை கட்டினால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 5 Dec 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் என்று வைகோ கூறினார்.

திருச்சி,

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து திருச்சியில் நேற்று தி.மு.க. தோழமை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

மேகதாதுவில் அணை கட்ட இருக்கும் கர்நாடகாவின் ரகசிய திட்டத்தை அறிந்து 2012-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி கிருஷ்ணகிரியில் ம.தி. மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி எச்சரிக்கை செய்தோம். இந்த ஆர்ப்பாட்டம் வேண்டுகோள் விடுவதற்கு அல்ல, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிற போராட்டம்.

ஒருமைப்பாடு

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ரூ.5 ஆயிரத்து 912 கோடியை கர்நாடகம் ஒதுக்கீடு செய்து விட்டது. அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட் களை கொண்டு வந்து குவித்து விட்டார்கள். அணை கட்டப்பட்டால் நாம் அழியவேண்டியது தான்.

கடந்த காலங்களில் ராஜ ராஜசோழனின் பேரன், ராணி மங்கம்மாள் ஆகியோர் படை எடுத்து சென்று அணைகளை உடைத்து இருக்கிறார்கள். இந்தியா என்ற ஒரே நாட்டுக்குள் இருப்போம் என்ற உறுதிமொழியால் நாம் படை எடுத்து செல்ல முடியாது. இவர்களால் என்ன செய்ய முடியும் என்று மோடி நினைக்கிறார். நீங்கள் அணையை கட்டுங்கள். நாங்கள் உடைக்க முடியாது. ஆனால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் என எச்சரிக்கிறேன்.

புயல் பாதிப்பு

கஜா புயலால் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியை கூட கொடுக்காமல் மோடி ரூ.353 கோடி கொடுத்து இருக்கிறார்.

கர்நாடகம் அணை கட்டும், கேரளா அணை கட்டும், ஆந்திரா அணை கட்டும். இதனை பார்த்துக்கொண்டு நாம் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற கேள்வி இளைஞர்கள் மனதில் எழும். தனிநாடாக இருந்தால் ஐ.நா. மன்றத்தில் முறையிட்டு பிரச்சினையை தீர்த்து கொள்ளலாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தூக்கி எறியப்பட வேண்டும்.

கருமேகங்களை விட எங்கள் கருங்கொடி படலம் மோடி விமானத்தை உள்ளே வர விடாது. தேர்தல் நேரத்தில் கூட மோடியை பிரசாரத்துக்கு தமிழகத்திற்குள் வர விடமாட்டோம். மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுக்க வேண்டும். மாநில கட்சிகளின் கூட்டமைப்பின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி வரும். மேகதாது அணை எவ்வளவு கட்டி இருந்தாலும் தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story