‘ஜெயலலிதாவுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்’ டாக்டர் பிரதாப்ரெட்டி தகவல்


‘ஜெயலலிதாவுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்’ டாக்டர் பிரதாப்ரெட்டி தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:14 AM IST (Updated: 5 Dec 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

‘ஜெயலலிதாவுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம், அது தொடர்பான ஆவணங்கள் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று அப்பல்லோ மருத்துவமனை செயல் தலைவர் டாக்டர் சி.பிரதாப் ரெட்டி கூறினார்.

சென்னை, 

அப்பல்லோ மருத்துவமனை 50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை அளித்து சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனையின் செயல் தலைவர் டாக்டர் சி.பிரதாப் ரெட்டி, சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொற்றாத நோய்கள் இன்றைய காலத்தில் மிகவும் ஆபத்தான நோய்களாக உள்ளன. அவற்றில் இதய நோய் மிகவும் ஆபத்தானது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோய்களால் மரணம் அடைகின்றனர். இதில் இந்தியாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள விழிப்புணர்வு தொடக்கத்திலேயே நோயைக் கண்டறிதல், தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளுதல் போன்றவை அவசியமாகும்.

ஜெயலலிதாவுக்கு உலகதர சிகிச்சை

சென்னையில் கடந்த 35 ஆண்டுகளில் 50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சை அளித்து முன்னோடியாக இருந்து, மைல் கல்லை எட்டியுள்ளோம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம். இது தொடர்பான ஆவணங்கள் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுதொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் மருத்துவமனைகள் குழுமத் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, இதய நோய்கள் அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.ஆர்.கிரிநாத் உள்ளிட்ட மருத்துவர்கள் இருந்தனர். முன்னதாக நைஜீரியாவை சேர்ந்த அயோடைல் அன்கொலாலுவ, சிபுவோ அணயச்சேர் ஆகிய 2 குழந்தைகளுக்கும் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்ததற்காக குழந்தைகள் சார்பில் டாக்டர் சி.பிரதாப் ரெட்டிக்கு பூங்கொத்து வழங்கப்பட்டது.

Next Story