விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை போலீஸ் ‘வாட்ஸ்-அப்’பில் வீடியோ வெளியானதால் பரபரப்பு


விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை போலீஸ் ‘வாட்ஸ்-அப்’பில் வீடியோ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 4:45 AM IST (Updated: 5 Dec 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளால் மனஉளைச்சலுக்கு ஆளானதாக புகார் கூறியுள்ள திருநங்கை போலீஸ் நஸ்ரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் நஸ்ரியா(வயது 22). திருநங்கையான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியில் சேர்ந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசாக பணியாற்றும் முதல் திருநங்கை என்ற சிறப்புடன் அவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் திருநங்கை நஸ்ரியா நேற்று முன்தினம் இரவு எலி மருந்தை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த வீடியோ ‘வாட்ஸ்-அப்’பில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவில் நஸ்ரியா பேசும் போது, ‘அதிகாரிகளால் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், தனது இந்த நிலைக்கு ஆயுதப்படை பிரிவு தலைமை காவலர் ஒருவரும், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரும் தான் காரணம். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

பின்னர் அந்த வீடியோவை தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பினார். இதை பார்த்தவர்கள் உடனடியாக அவரை சென்று பார்த்தனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த நஸ்ரியாவை மீட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது:-

திடீர் தலைமறைவு

காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதும் திருச்சியில் பயிற்சி பெற்று வந்தபோதே காரணம் எதுவும் கூறாமல் நஸ்ரியா திடீரென வெளியேறிவிட்டார். பின்னர் தானாக வந்த நஸ்ரியா, மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்து பயிற்சி பெற்றார்.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். ஆயுதப்படை பிரிவில் அலுவலக பணி வழங்கப்பட்டது. காரணம் எதுவும் கூறாமல் திடீரென தலைமறைவாகி விட்டார். 25 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந் தேதி மேற்கண்டவர்கள் மீது புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டேன். விசாரணையில் அதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்தது.

இதனையடுத்து திருநங்கை நஸ்ரியாவிற்கு ராமநாதபுரம் பாஸ்போர்ட் பிரிவில் கணினி உதவியாளர் பணி வழங்கினேன். அதற்கான ஆணையை பெற்ற நஸ்ரியா இதுபோன்று செயலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நஸ்ரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜினாமா செய்ய தயார்

காவல் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை. சிரமப்பட்டு தான் பல்வேறு தடைகளை தாண்டி இந்த பணியில் சேர்ந்தேன். இப்போதுள்ள சூழ்நிலையில் நான் எனது வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் அது முக்கியம் அல்ல. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story