விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்த தொழில் அதிபர் கைது


விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்த தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2018 4:45 AM IST (Updated: 5 Dec 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

ஆதம்பாக்கத்தில் தனியார் பெண்கள் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்ராஜ் என்ற சஞ்சீவி(வயது 48). கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் மேலும் ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 1-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, அதில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியை அமைத்து நிர்வகித்து வருகிறார்.

மருத்துவமனையில் நர்சாக வேலை செய்யும் பெண்கள் உள்பட 6 பேர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் கட்டணமாக சம்பத்ராஜ் வசூலித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் உள்ள பெண்கள் குளித்து முடித்து விட்டு தலைமுடியை காய வைப்பதற்காக ‘ஹேர் ட்ரையரை’ பயன்படுத்த அங்கிருந்த மின்சார பிளக்கில் சொருகினர். ஆனால் பிளக்கில் நுழையவில்லை.

கேமரா

இதையடுத்து பெண்கள் பிளக்கை கழற்றி பார்த்தனர். அப்போது அதனுள் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பெண்கள் இது பற்றி ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர்.

தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கள் முத்துசாமி, ராஜூ, போலீஸ் ஏட்டுகள் பாலகிருஷ்ணன், ரகு, அந்தோணி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விடுதியில் உள்ள 3 குளியலறைகளில் இருந்த மின்சார பிளக்குகளிலும், படுக்கை அறையில் இருந்த எல்.இ.டி. குண்டு பல்புகளிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆசைக்கு இணங்க வைக்க...

இதையடுத்து பெண்கள் விடுதியை நடத்தி வந்த ரியல் எஸ்டேட் அதிபர் சம்பத்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சம்பத்ராஜ், விடுதியில் உள்ள குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்களை மறைத்து வைத்து, அதன் மூலம் அங்கு உள்ள பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இருக்கிறார். பின்னர் அந்த வீடியோ பதிவுகளை செல்போன், மடிக்கணினி, ‘ஐபேட்’ உள்ளிட்டவற்றில் சேகரித்தார்.

அந்த வீடியோ பதிவுகளை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி, அவற்றை ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங் களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி அவர்களை தனது ஆசைக்கு இணங்க வைக்கலாம் என சம்பத்ராஜ் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மாட்டிக்கொண்டார்.

விடுதியில் இருந்து 9 ரகசிய கேமராக்களும், சம்பத்ராஜிடம் இருந்து 10 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 2 ஐபேட் மற்றும் ஒரு ஹார்ட்டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு போலீசார் கூறினார்.

வீடு கட்டி தருவதாக மோசடி

சம்பத்ராஜ் ஏற்கனவே இதே போல் தனது அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களை மிரட்டி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது.

மேலும் அவர் தனது கட்டுமான நிறுவனத்தின் மூலம் வீடு கட்டி தருவதாக கூறி பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்தாக எழுந்த புகார் தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு சென்னை மத்திய குற்ற புலனாய் பிரிவு அவர் மீது வழக்கு பதிவு செய்தது தெரியவந்திருக்கிறது.

சம்பத்ராஜ் மீது வேறு ஏதேனும் மோசடி வழக்குகள் இருக்கிறதா? என்பது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளியூரில் இருந்து சென்னைக்கு படிக்கவும் வேலைக்கு செல்லவும் வரும் பெண்கள் தங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் பெண்கள் விடுதிகள் அதிகமாக உள்ளன. அந்த விடுதிகளில் ஏராளமான பெண்கள் தங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விவகாரம் விடுதியில் தங்கி இருக்கும் பெண்களிடையே பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story