வடிவேலு நகைச்சுவை போன்று ருசிகர சம்பவம் “கிணற்றை காணோம்” -அமைச்சரிடம் பொதுமக்கள் புகாரால் பரபரப்பு


வடிவேலு நகைச்சுவை போன்று ருசிகர சம்பவம் “கிணற்றை காணோம்” -அமைச்சரிடம் பொதுமக்கள் புகாரால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 3:15 AM IST (Updated: 1 Jan 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே கிணற்றை காணோம் என்று பொதுமக்கள், அமைச்சரிடம் புகார் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

கிணற்றை காணோம் என்று ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்வார். இந்த நகைச்சுவை காட்சி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இதே போன்ற சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் பாலக்கோடு ரோட்டில் உள்ள சேசப்ப நாயுடு கொட்டாய் பகுதியில் நீண்ட காலமாக கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கிணற்றில் கொட்டி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கிணறு நிறைந்து விட்டது. குப்பைகள் குவிந்ததால் கிணறு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

இந்தநிலையில் காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைத்திடலில் சீரமைப்பு பணிகளை தொடங்கி வைக்க வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் இந்த பகுதி பொதுமக்கள் சிலர், “கிணற்றை காணவில்லை. அதை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்” என புகார் மனு அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர், கிணறு மாயமானது குறித்து கேட்டபோது சிலர் கிணற்றை மூடி இருக்கக்கூடும் என தெரிவித்தனர். மூடியுள்ள கிணறும் எங்கிருக்கிறது என தெரியவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இந்த மாயமான கிணறு கோவிலுக்கு சொந்தமானது என்றும், எங்களுக்கு சொந்தம் இல்லை என்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிணற்றை காணவில்லை என காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். கிணறு மாயமானது குறித்து போலீசாரிடம் பேரூராட்சி நிர்வாகம் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Next Story