திருவாரூர் தொகுதியில் 28-ந்தேதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள்
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை,
காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். இந்தநிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருவாரூர் தொகுதியில் இம்மாதம் 28-ந்தேதி (திங்கட் கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 3-ந்தேதி இதற்கான அரசாணை வெளியாகும். அன்றைய தினமே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 10-ந்தேதி ஆகும். 11-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடை பெறும். வேட்புமனுவை திரும்ப பெற 14-ந்தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை 31-ந்தேதி நடைபெறும். பிப்ரவரி 2-ந்தேதி தேர்தல் நடைமுறை நிறைவு பெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டு இருப்பதால் திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதி முறைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
திருவாரூர் தொகுதியில் இதுவரை நடந்த 10 சட்டசபை தேர்தலில் 6 முறை தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 3 முறை போட்டியிட்டு, வெற்றியை பெற்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 1,21,473 வாக்குகளை கருணாநிதி பெற்று, வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் 53,107 வாக்குகளை பெற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் மாசிலாமணி 13,158 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் சிவக்குமார் 1,787 வாக்குகளும், நோட்டாவுக்கு 2,177 வாக்குகளும் பதிவானது.
திருவாரூர் தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களுக்கு இப்போதே ஏற்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாள் என்பதால், இன்னும் ஒரு வாரத்திற்குள் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது.
திருவாரூர் தொகுதிக்கு முன்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதி ஆகஸ்டு 2-ந்தேதி காலியானது. திருவாரூர் தொகுதியுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தி.மு.க. வேட்பாளர் சரவணன் தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதேபோன்று 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் அந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இந்த தொகுதிகள் சம்பந்தமாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கான தேர்தலை பிப்ரவரி இறுதிக்குள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதால் பிப்ரவரியில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஐகோர்ட்டு தீர்ப்பை பொறுத்து முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சித்தான் வெற்றி பெறும் என்று ஆரூடம் சொல்லப்பட்டு வந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. எனவே திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இப்போதே தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது.
ஆர்.கே.நகரை போல் திருவாரூரை விட்டு விடக்கூடாது என்பதில் தி.மு.க.வும் கவனமாக இருக்கிறது. தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்டு இருக்கும் மு.க.அழகிரி இந்த இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடலாம் என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. எனவே இந்த இடைத்தேர்தலில் பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Related Tags :
Next Story