புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோவில்கள் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோவில்கள் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 1 Jan 2019 10:51 AM IST (Updated: 1 Jan 2019 10:51 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு பிறந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் - தேவாலயங்களில் நள்ளிரவு - அதிகாலையிலேயே ஏராளமானோர் திரண்டு பிரார்த்தனை நடத்தினர்.

சென்னை,

சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் குடும்பத்துடன் வருகை தந்தனர். அதிகாலையிலேயே வந்த அவர்கள், நீண்ட வரிசையில் நின்று முருகனை வழிபட்டனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள், புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டி பூஜைகள் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் நள்ளிரவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தேவர் மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் யானை வாகனத்தில் எழுந்தருளி தங்க ஆபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு பிரார்த்தனைக்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டான 2019-ம் ஆண்டு பிறப்பதையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்  செய்தனர். தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை மற்றும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன.

சென்னையில் சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. சாந்தோம் பேராலயத்தில் மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டை வெஸ்லி சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி தூய இருதயர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை சவேரியார் பேராலயம், கதீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

கரூரில் உள்ள புனித தெரசம்மாள் ஆலயம், சி.எஸ்.ஐ ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

நாகை மாவட்டம் புனித வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற திருப்பலி பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் புத்தாண்டு பிறந்ததை அறிவித்ததும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் புத்தாண்டை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை வணங்கி புத்தாண்டை வளமாக்க வேண்டிக் கொண்டனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் புத்தாண்டை முன்னிட்டு வண்ண வண்ண விளக்குகளால் பொன்னாகவும் ஒளியாகவும் மின்னியது. நடுநடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Next Story