ஜி.எஸ்.டி. வரி மாற்றத்தால் சென்னை தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைந்தது வெளி மாவட்டங்களில் குறைப்பு இல்லை


ஜி.எஸ்.டி. வரி மாற்றத்தால் சென்னை தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைந்தது வெளி மாவட்டங்களில் குறைப்பு இல்லை
x
தினத்தந்தி 2 Jan 2019 2:00 AM IST (Updated: 2 Jan 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

‘ஜி.எஸ்.டி’ வரி குறைப்பு காரணமாக சென்னை தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நேற்று குறைக்கப்பட்டது. வெளியூர் திரையரங்குகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது.

சென்னை, 

‘ஜி.எஸ்.டி’ வரி குறைப்பு காரணமாக சென்னை தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நேற்று குறைக்கப்பட்டது. வெளியூர் திரையரங்குகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி வரி மாற்றம்

சரக்கு சேவை வரி விதிப்பில் மத்திய அரசு சமீபத்தில் மாற்றங்கள் செய்தது. பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. சினிமா டிக்கெட்டுகள் மீதான வரியையும் குறைத்தனர். ஏற்கனவே ரூ.100-க்கு அதிகமான சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ரூ.100-க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதித்து இருந்தனர்.

புதிய வரி மாற்றத்தின் படி சினிமா டிக்கெட்டுகள் மீதான 28 சதவீத வரி 18 சதவீதமாகவும், 18 சதவீதம் வரி 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. ஜனவரி 1-ந்தேதி முதல் இது அமுலுக்கு வரும் என்றும் அறிவித்தனர். அதன்படி சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நேற்று டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது.

கட்டணம் குறைப்பு

ரூ.150 டிக்கெட் கட்டணம் ரூ.135 ஆகவும் ரூ.120 ஆக இருந்த கட்டணம் ரூ.108 ஆகவும் குறைந்தது. ரூ.100 டிக்கெட் கட்டணத்தை ரூ.94 ஆக குறைத்தனர். இதுபோல் ரூ.80, ரூ.60, ரூ.50 என்று வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் 12 சதவீதம் குறைக்கப்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.160 ஆக இருந்த கட்டணம் ரூ.130 ஆகவும் ரூ.150 ஆக இருந்த கட்டணம் ரூ.120 ஆகவும் குறைந்தது.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் முதல் வகுப்பு கட்டணம் ரூ.190.78 ஆகவும் 2-ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.60.12 ஆகவும் குறைக்கப்பட்டது.

ஆனால் வெளிமாவட்டங்களில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்காமல் பழைய கட்டணத்தையே வசூலித்தனர். இதனால் சில தியேட்டர்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உத்தரவு நகல்

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, “சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைத்த உத்தரவு நகல் வெளிமாவட்ட திரையரங்குகளுக்கு இன்னும் வரவில்லை. இதனால் கட்டணத்தை குறைக்கவில்லை. சென்னை தியேட்டர்களுக்கு உத்தரவு நகல் கிடைத்து இருப்பதால் கட்டணத்தை குறைத்து உள்ளனர்.

இன்று உத்தரவு நகல் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறோம். அது கிடைத்ததும் கட்டணத்தை குறைப்போம்” என்றார்.

Next Story