திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன? 5-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு


திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன? 5-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 2 Jan 2019 3:00 AM IST (Updated: 2 Jan 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து வருகிற 5-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

சென்னை, 

திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து வருகிற 5-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 22-ந்தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டியிடப்போவதாகவும், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் மக்கள் நீதி மய்யம் நிச்சயமாக வேட்பாளர்களை களம் இறக்கும் என்றும் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்து இருந்தார்.

செயற்குழு கூட்டம்

இந்தநிலையில் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு மட்டும் வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அதற்கான தேர்தல் பணிகளை அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உடனடியாக தொடங்கிவிட்டன. நேர்காணல் நடத்தி வேட்பாளர்களையும் விரைவில் அந்த கட்சிகள் தேர்வு செய்ய உள்ளன.

திருவாரூர் இடைத்தேர்தலில் தங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பது குறித்து விவாதிப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது செயற்குழு கூட்டம் வருகிற 5-ந்தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டி?

திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? கூட்டணி அமைப்பதா? அல்லது வேட்பாளர்களை நிறுத்தாமல் பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பது குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படுகிறது. அதன் பின்னர் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story