மாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தும் ‘டிக் டாக்’ செயலியை கண்காணிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘டிக் டாக்’ செயலி
இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட ‘டிக் டாக்’ எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. எந்தவித ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ‘டிக் டாக்’ செயலி செயல்படும் விதமும், அதில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையை தொலைப்பதும் கவலையளிக்கிறது.
‘டிக் டாக்’ செயலி அதன் பயனாளிகளிடம் ஒருவித போதையை ஏற்படுத்துகிறது. ஒரு பதிவுக்கு ஆயிரம் பேரிடம் இருந்து வரவேற்பு கிடைத்தால், அடுத்த முறை அதை இரு மடங்காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூடுதலாக ஆபாச சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர். இது தவறு; இது சொந்த வாழ்க்கையையும், சமூகத்தையும் சீரழிக்கும் என்ற குற்ற உணர்ச்சி கூட ‘டிக் டாக்’ செயலியின் அடிமைகளுக்கு புரிவதில்லை என்பது தான் மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரிய விஷயமாகும்.
கவனச்சிதறல்
‘டிக் டாக்’ செயலியை இந்தியாவில் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 40 சதவீதத்துக்கும் கூடுதலானவர்கள் வளர் இளம்பருவத்தினர். அவர்களிடம் இந்த செயலியின் உள்ளடக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்; அதனால் சமூகத்தில் எத்தகைய விளைவுகள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி, ‘டிக் டாக்’ செயலி மாணவர்களிடம் கவனச்சிதறலை ஏற்படுத்தி கல்வியை பாதிக்கிறது.
இளைய தலைமுறையினர் வளர் இளம் வயதில் இத்தகைய கவனச்சிதறல்களுக்கும், திசை மாறுதல்களுக்கும் உள்ளானால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதை தடுக்க ‘டிக் டாக்’ செயலியை கடுமையான கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உள்ளாக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ‘டிக் டாக்’ செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கும், இளைய தலைமுறையினருக்கும் பெற்றோர் எடுத்துக்கூறி அவர்களை இந்த போதையில் இருந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story