மதுரை மல்லிகைக்கு வந்த மவுசு, கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை


மதுரை மல்லிகைக்கு வந்த மவுசு, கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை
x
தினத்தந்தி 2 Jan 2019 3:30 AM IST (Updated: 2 Jan 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை, 

மதுரை மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மல்லிகை

தமிழகத்தில் உள்ள மற்ற மல்லிகை பூவுக்கு இல்லாத மணம், மதுரை மல்லிகைக்கு உண்டு. எனவே எப்போதும் அனைத்து பூ மார்க்கெட்டிலும் மதுரை மல்லிகைக்கு தனி கிராக்கி இருக்கும். ஆண்டு தோறும் வெயில் காலங்களான சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் மதுரை மல்லிகை பூ வரத்து இருக்கும். அப்போது 1 கிலோவின் விலை ரூ.100 தான் இருக்கும். அதைத்தொடர்ந்து மழை காலங்களிலும், பனி காலத்திலும் மதுரை மல்லிகையின் வரத்து சற்று குறைவாக தான் இருக்கும். எனவே அந்த சமயத்தில் அதன் விலை உச்சத்திற்கு சென்று விடும்.

தற்போது பனி காலம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து மிகவும் குறைந்து போய்விட்டது. எனவே கடந்த ஒரு வாரமாக அங்கு 1 கிலோ மல்லிகையின் விலை ரூ.1600-ல் இருந்து ரூ.1,800 வரை விற்பனையானது. இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி மல்லிகையின் தேவை அதிகமாக இருந்ததால் அதன் விலை நேற்று ரூ.2 ஆயிரத்தை தொட்டது.

ஆங்கில புத்தாண்டு

இது குறித்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரி கணேஷ் பிரபு கூறும்போது,“மதுரை மல்லிகை பூ ஆண்டு தோறும் நமக்கு கிடைத்து வந்தாலும் பனி காரணமாக மார்கழி, தை மாதங்களில் வரத்து குறைவாக இருக்கும். மார்கழி மாதத்தில் ஆங்கில புத்தாண்டு காரணமாக அன்றைய தினம் விலை உயர்வாக இருக்கும். அதனால் 1 கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை ஆனது” என்றார்.

Next Story