திருவாரூரில் 303 வாக்குச்சாவடி மையங்கள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
திருவாரூரில் 303 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,
திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப் பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.இந்த அறிவிப்பினை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 03-ம் தேதி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 28-ந் தேதி வாக்குப்பதிவும், 31-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இடைத்தேர்தலையொட்டி திருவாரூரில் 303 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது, அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியுடைய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். திருவாரூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,58,687, ஆண்கள் - 1,27,500 பேர், பெண்கள் -1,31,169 பேர், 3-ம் பாலினத்தவர் - 18 பேர் என சத்யபிரதா சாகு கூறினார்.
Related Tags :
Next Story