எல்லா நிலைகளிலும் தோல்வி அடைந்த தமிழக அரசின் அறிக்கையைத்தான் சட்டசபையில் கவர்னர் படிக்கிறார் மு.க.ஸ்டாலின் பேட்டி
எல்லா நிலைகளிலும் தோல்வி அடைந்த தமிழக அரசின் அறிக்கையைத்தான் சட்டசபையில் கவர்னர் படிக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
எல்லா நிலைகளிலும் தோல்வி அடைந்த தமிழக அரசின் அறிக்கையைத்தான் சட்டசபையில் கவர்னர் படிக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மிகப்பெரிய தோல்விதமிழக கவர்னர் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வெளியே நிருபர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) அளித்த பேட்டி வருமாறு:–
கவர்னர் உரையை நாங்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். வெளிநடப்பு செய்வதற்கான காரணங்களை பொறுத்த வரையில், இந்த அரசு எல்லா நிலையிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. எல்லாத் துறையிலும் ஒட்டுமொத்த தோல்வியைப் பெற்ற அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வெட்கக்கேடுஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தத்தைச் செலுத்தி ஒரு மோசமான சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்து இந்த அரசு பேச முடியவில்லை.
குட்கா புகழ் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு பல நெருக்கடிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து இந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கக்கேடான செயலாகும்.
ஜெயலலிதா சாவில் மர்மம்அதேபோல், முதல்–அமைச்சராக இருந்தாலும், துணை முதல்–அமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீதெல்லாம் நீதிமன்றத்திலே ஊழல் வழக்குகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்துக்கும் மேலாக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறப்பில் மிகப்பெரிய மர்மம் இருக்கிறதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக, ஆக்ரோஷமாக, ஆத்திரமாக, ஆவேசமாக பத்திரிகையாளரிடத்தில் கூறியிருக்கிறார்.
அரசின் அறிக்கைஇதனால்தான் அவர் இறந்தவுடனே சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நாங்கள் அப்போதே எடுத்துச் சொன்னோம். அதைத் தொடர்ந்து இப்போதும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கக் கூடிய கவர்னர் உரையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல்.
அரசு எழுதித் தந்திருக்கக்கூடிய தோல்வி அறிக்கைகளை இப்போது சட்டமன்றத்தில் கவர்னர் படித்துக் கொண்டிருக்கிறார். எனவே, அதை நாங்கள் கண்டித்து, அவருடைய உரையை புறக்கணித்து திமு.க. சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் கூட்டணிக்காக...கவர்னர் உரை குறித்து, விமர்சனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கவர்னர் உரை தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. ஒரு முதல்–அமைச்சர் தனது பதவிக்குள்ள பொறுப்பின் அடிப்படையில் வழக்கமாக கோப்புக்களை பார்க்கும் பணிக்காக ‘திறமை மிக்க தலைமை’ என்று கவர்னர் புகழாரம் சூட்டியிருப்பது தோற்று விட்ட அரசை தேர்தல் கூட்டணிக்காக தூக்கி நிறுத்த முயற்சிப்பதாகவே அமைந்திருக்கிறது.
கவர்னர் உரையில் தமிழக முன்னேற்றத்திற்கான எந்தவொரு புதிய திட்டங்களும் இல்லை. மறைந்த ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து அத்திக்கடவு–அவினாசி திட்டம் பற்றி கவர்னர் உரை, நிதி நிலை அறிக்கை எல்லாவற்றிலும் ‘அறிவிப்புகள்’ இடம் பெறுவது போல் இந்த உரையிலும் இடம்பெற்றுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கவேண்டும் என்று ஒரு வார்த்தை கூட கவர்னர் உரையில் இடம்பெறவும் இல்லை. மேலும் மேகதாது அணை கட்ட அனுமதியளித்த மத்திய அரசுக்கு ஒரு கண்டனத்தை கூட அ.தி.மு.க. அரசு தெரிவிக்கவும் இல்லை.
ஜால்ரா சத்தம்‘அரசு கொள்கை முடிவு எடுத்து மூடவில்லை’ என்று ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய தீர்ப்பாயம் இந்த அரசின் முகத்தில் கரி பூசிய பிறகும் ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணை பிறப்பித்தது’ என்று கவர்னர் உரையில் கூச்சமேயின்றி மார்தட்டிக் கொள்வது தன் முதுகில் தானே தட்டிக் கொள்வது போலிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கால பரப்புரைக்காக இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி பேசியிருந்தாலும், முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்று கவர்னர் உரையின் எந்தப் பக்கத்தில் தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.
15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்ட இடத்தில் கஜா புயலுக்காக 10 சதவீத நிதியைக் கூட வழங்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு மனமார்ந்த பாராட்டு, மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை மூன்று வருடங்கள் கிடப்பில் போட்டு, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி என்று அ.தி.மு.க. அரசின் ஜால்ரா சத்தம் தான் கவர்னர் உரையின் பக்கங்கள் பலவற்றில் எதிரொலிக்கிறது.
தோல்வி அடைந்த அறிக்கைகவர்னர் உரை அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோல்விடைந்து விட்ட அ.தி.மு.க. அரசின் அறிக்கை. இதனால் தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையோ, பலனோ இல்லாத பம்மாத்து அறிக்கையாகவே அமைந்துள்ளது. போகி கழிந்து பொங்கல் வருவது போல் ஊழல் மயமான அ.தி.மு.க. ஆட்சி கழிந்து மக்கள் விரும்பும் தி.மு.க.வின் நல்லாட்சி மீண்டும் அமைந்தால்தான் மக்களுக்கு தேவையான ஆக்கபூர்வமான திட்டங்கள் அடங்கிய கொள்கைகள் அடங்கிய கவர்னர் உரை வெளிவரும் என்று கருதி அந்த நாளை எதிர்பார்த்து மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பதே இன்றைய நிலை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.