சரக்கு சேவை வரி வருவாய் – இழப்பீடு தொகையான ரூ.7,214 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கவில்லை பன்வாரிலால் புரோகித் தகவல்


சரக்கு சேவை வரி வருவாய் – இழப்பீடு தொகையான ரூ.7,214 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கவில்லை பன்வாரிலால் புரோகித் தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:30 AM IST (Updated: 3 Jan 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு சேவை வரி வருவாய் – இழப்பீடு தொகையான ரூ.7,214 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கவில்லை என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

சென்னை,

சரக்கு சேவை வரி வருவாய் – இழப்பீடு தொகையான ரூ.7,214 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கவில்லை என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு

தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களின் நலனையும், எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிரிவினரின் நலனையும் பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி, தொடர்ந்து பாடுபட்டு வரும் ஒரு உண்மையான மக்கள் நல அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. முதல்–அமைச்சர் தனது திறமைமிக்க தலைமையின் மூலம், பதவியேற்ற நாள் முதல் இதுவரை முன் எப்போதும் இல்லாத அளவில் 11,286 கோப்புகளில் துரிதமாக முடிவு கண்டு, பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் அரசாக, இந்த அரசை வழிநடத்தி வருகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிதிநிலை சார்ந்த பல்வேறு சவால்களுக்கு இடையிலும், நிதிநிலைமையை சிறப்பாக நிர்வகித்து வரும் மாநிலமாகத் தொடர்ந்து தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. எனினும், மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப் பகிர்வில், 14–வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பினால், மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நியாயமான நிதி பகிர்வு

இந்த நிலையில், உதய் திட்டத்தைச் செயல்படுத்தியதாலும், 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றியதாலும், மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறையில் மாநிலங்களுக்கு இடையேயான வரியில் கிடைக்க வேண்டிய பங்கும், இந்த வரி விதிப்புத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும், மத்திய அரசு உடனுக்குடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், மாநிலத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வு பற்றிய பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதியின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட 15–வது நிதிக்குழு, 2018–ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, மாநில அரசுடன் விரிவான கலந்தாலோசனைகளை நடத்தியுள்ளது. செயல்திறன், பாரபட்சமற்ற நியாயமான நிதிப் பகிர்வு ஆகிய வழிமுறைகளை 15–வது நிதிக்குழு பின்பற்றி, தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதிப் பகிர்வுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

மத்திய அரசு வழங்கவில்லை

மாறுப்பட்ட புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவதில் ஏற்பட்ட சிக்கல்களைத் திறம்படக் கையாண்டு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறையை தமிழ்நாடு வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. எனினும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாயில் 14 சதவீத வருவாய் வளர்ச்சியை மாநிலங்கள் பெறும் வகையில் உறுதியளிக்கப்பட்டவாறு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும், மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாயில் மாநிலத்தின் பங்கினையும் மத்திய அரசு உடனுக்குடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், 2017–2018–ம் நிதியாண்டிற்கு மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ரூ.5,454 கோடி அளவிலான வருவாயினையும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் 2017–2018–ம் ஆண்டிற்கான ரூ.455 கோடி அளவிலான இழப்பீட்டுத் தொகையையும், 2018–ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்துக்கு ரூ.1,305 கோடி இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு இதுவரை வழங்க வேண்டியுள்ள நிலையில், இந்நிலுவை மாநிலத்தின் நிதி நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலுவைத் தொகைகளை விரைவாக மாநில அரசுக்கு வழங்குவதுடன், இனிவரும் காலங்களிலும் மாநிலத்திற்குரிய தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நியாயமான முடிவு

மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவில் சில மாற்றங்களை பரிந்துரை செய்தும், அணை பாதுகாப்பு சட்ட முன்வடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மோட்டார் வாகன சட்ட முன்வடிவிலும், மின்சாரச் சட்ட முன்வடிவிலும் சில கருத்துகளை எழுப்பியும், தேசிய அளவில் மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு சட்ட முன்வடிவுகளில் இந்த அரசு தனது கருத்துகளை சுட்டிக்காட்டி உள்ளது. இவை தமிழ்நாட்டு மக்களின் நலனையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலியுறுத்தப்பட்டவையாகும்.

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் இயற்றப்படும் இதுபோன்ற சட்ட முன்மொழிவுகளில் தமிழ்நாட்டின் கருத்துகளை மத்திய அரசு பாகுபாடில்லாமல் ஆராய்ந்து, நியாயமான முடிவுகளை எடுக்கும் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story