இறப்பு சான்றிதழுக்கு அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய காட்சி ‘வாட்ஸ் அப்’-ல் வெளியானதால் பரபரப்பு
இறப்பு சான்றிதழ் வழங்க தொழிலாளியிடம் அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய காட்சி ‘வாட்ஸ்அப்’-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி,
இறப்பு சான்றிதழ் வழங்க தொழிலாளியிடம் அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய காட்சி ‘வாட்ஸ்அப்’-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறப்பு சான்றிதழ்
கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் நாரணாபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 55), ஓட்டல் ஊழியர். இவருடைய தந்தை சுப்புலு கடந்த 9-1-2011 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து மாரிமுத்து தனது தந்தையின் இறப்பு சான்றிதழை பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில் அவரது மகன் ஒண்டிவீரன் (30) தனது தாத்தா சுப்புலுவின் நிலத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக அவருக்கு தாத்தாவின் இறப்பு சான்றிதழ் தேவைப்பட்டது. எனவே, ஒண்டிவீரன் தனது தாத்தா சுப்புலுவின் இறப்பு சான்றிதழை கேட்டு, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 23-7-2018 அன்று விண்ணப்பித்தார். ஆனால், இறப்பு சான்றிதழ் கிடைக்க காலதாமதம் ஆனது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
இதையடுத்து அவர், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு இளநிலை உதவியாளரை அணுகினார். அப்போது அவர், தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தந்தால் உடனே இறப்பு சான்றிதழை தருவதாக கூறினார். அதற்கு ஒண்டிவீரன், நான் தினக்கூலியாக வேலை செய்கிறேன். என்னால் அந்த தொகையை தர இயலாது. எனவே, ரூ.2 ஆயிரம் தருகிறேன் என்று கூறி உள்ளார்.
அதற்கு சம்மதித்த இளநிலை உதவியாளர், லஞ்சப் பணத்தை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் கொண்டு வருமாறு கூறி உள்ளார். அதன்படி அவர், சம்பவத்தன்று தன்னுடைய தந்தை மாரிமுத்துவுடன் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் தயாராக நின்றார்.
லஞ்சம் வாங்கிய காட்சி
அப்போது அங்கு மொபட்டில் வந்த இளநிலை உதவியாளரிடம் ஒண்டிவீரன் தந்தை மாரிமுத்து ரூ.1,000 லஞ்சமாக வழங்கினார். அந்த பணத்தை பெற்று கொண்ட அவர், மீதி ரூ.1,000 தந்து விட்டு, இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ள கூறி உள்ளார்.
இளநிலை உதவியாளர் லஞ்சம் வாங்கிய காட்சியை ஒண்டிவீரன் தனது செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த காட்சி ‘வாட்ஸ்அப்’-ல் பரவி கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதிவிட்டது ஏன்?
இதுகுறித்து ஒண்டிவீரன் கூறியதாவது:-
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக உதவியாளர் லஞ்சம் பெறும் காட்சியை, தூத்துக்குடியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கொடுத்து முறையிட்டேன். ஆனால் அவர்கள், இது சிறிய தொகை என்று பொருட்படுத்தவில்லை. எனவே, இந்த காட்சியை பொதுமக்கள் பார்வைக்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story