ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வினியோகம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
தமிழகத்தில் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் கடந்த 2018–ம் ஆண்டு மார்ச் முதல் 2019–ம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டு கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.
சென்னை,
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் கடந்த 2018–ம் ஆண்டு மார்ச் முதல் 2019–ம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டு கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் தமிழக மக்களின் 100 சதவீத உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் பெறுவதற்கு மக்கள் மேலும் விரும்புவதாகவும், வெளிச்சந்தையில் இவற்றின் விலையை கட்டுப்படுத்த இந்தத் திட்டத்தை மேலும் தொடரலாம் என்றும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனர், தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.
அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்தத் திட்டத்தை வரும் மார்ச் மாதத்தில் இருந்து 2020–ம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story