வேலைவாய்ப்பில் அக்கறை காட்டாத மத்திய, மாநில அரசுகளை இளைஞர்கள் தூக்கி எறிய வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை


வேலைவாய்ப்பில் அக்கறை காட்டாத மத்திய, மாநில அரசுகளை இளைஞர்கள் தூக்கி எறிய வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 31 Jan 2019 7:15 PM GMT (Updated: 31 Jan 2019 6:40 PM GMT)

இந்தியாவில் 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் உயர்ந்து விட்டது என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் உயர்ந்து விட்டது என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இதன் மூலம், வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த பொய்யான வாக்குறுதிகளின் முகத்திரை கிழித்து தொங்க விடப்பட்டிருக்கிறது.

சென்ற தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என்று நம்பி வாக்களித்த இளைஞர்கள், பெண்கள் மத்தியில் வேலை இல்லாத்திண்டாட்டம் 13.6 சதவீதம் முதல் 27.2 சதவீதமாக உயர்ந்து அவர்களின் எதிர்காலம் இருட்டறையில் தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மட்டும் 80 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு வேலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள். அதில் 24 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் மட்டும் 30 லட்சம் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை அரசின் இணைய தளத்திலேயே காண முடிகிறது. எனவே வேலைவாய்ப்பில் எவ்வித அக்கறையும் காட்டாத மத்திய, மாநில அரசுகளை இளைஞர்கள் தூக்கி எறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story