சென்னை ஆன்மிக கண்காட்சியில் பெற்றோர், ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் பாத பூஜை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது


சென்னை ஆன்மிக கண்காட்சியில் பெற்றோர், ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் பாத பூஜை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 1 Feb 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னை இந்து ஆன்மிக கண்காட்சியில் பெற்றோர், ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் பாத பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சென்னை, 

சென்னை இந்து ஆன்மிக கண்காட்சியில் பெற்றோர், ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் பாத பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மிக சேவை கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியில் நேற்று பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 1,500 தமிழ் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதற்காக ஆசிரியர்களுக்கு வேட்டி, நீலநிற சட்டை, தோளில் போடும் துண்டும், ஆசிரியைகளுக்கு நீலநிறத்தில் புடவையும் வழங்கப்பட்டு இருந்தது. இவர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

மாணவ, மாணவிகள் அமர்ந்து, ஆசிரியர்களின் கால்களில் தண்ணீர் தெளித்து, சந்தனம், குங்குமம் வைத்து, பூ தூவி வழிபட்டனர். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு உச்சி முகர்ந்து வாழ்த்து கூறினார்கள். இதில் பம்மல் சங்கரா கல்வி குழுமம், ஆதம்பாக்கம் டி.ஏ.வி. பள்ளி உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.

தொடர்ந்து மாலையில் வைணவ மடாதிபதிகள் கலந்து கொண்ட ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர், காஞ்சீபுரம் வேதகேசரி அழகிய மணவாள ஜீயர் உள்ளிட்ட ஜீயர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

தொடர்ந்து பஞ்சாப் மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த கலை குழுவினரின் கலாசார நிகழ்ச்சிகளை திரளானோர் பார்த்து ரசித்தனர்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசுகையில், ‘இந்து ஆன்மிக கண்காட்சி 2009-ம் ஆண்டு 30 அரங்குகளுடன் 2 நாட்கள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களால் விரும்பப்படுமா? ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஆச்சரியப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆண்டு தோறும் பொதுமக்களின் பேராதரவுடன் இந்த கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியை லட்சகணக்கான மக்கள் பார்வையிடுவது, நம்முடைய பண்பாடு மற்றும் கலாசாரம் காக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுகிறது’ என்றார்.

கண்காட்சியில் நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தங்களை அர்ப்பணித்த தியாகிகளைப் போற்றும் விதமாக காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தமான் சிறை, ஜாலியன் வாலாபாக் நிகழ்வுகள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் செக்கிழுத்த நிகழ்வு, வேலு நாச்சியாரின் வீரம், வீரவாஞ்சியின் சாகசம் மற்றும் கட்டபொம்மனின் தியாகம் போன்ற காட்சி கூடங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஜாலியன் வாலாபாக் படுகொலை களம், தோட்டா துளைத்த மதில் சுவர், தப்பிப்பிழைத்தோர் தவறி விழுந்த கிணறு, குருதிப்புனல் பொங்கிய இடம், தியாகத்தின் நினைவாக அமர தீபம், அப்பாவிகளை சுட்டு அழித்த இடம் போன்றவை பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் படுகொலை காட்சிகள் வீடியோ படக்காட்சிகளுடன் நேரடியாக காணும் வகையில் அமைத்திருந்த அரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளின் பலதரப்பட்ட பரிணாமங்களை விளக்கும் காட்சி பார்வையாளர்களை மிகவும் பிரமிக்க வைக்கிறது. ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் ஒளி, ஒலிக்காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது. அதன் அருகில் அந்தமான் சிறையின் மாதிரியும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு உள்ளே சென்று பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) பெண்மையை போற்றும் வகையில் பெண் குழந்தைகள் மற்றும் முதுமை அடைந்த தாய்மார்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் வணங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், கொங்கு வேளாளர் கலாசாரம் சார்பில் ஒயிலாட்டமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.

கண்காட்சி அமைப்பு குழு துணைத்தலைவர் ஆர்.ராஜலெட்சுமி கூறுகையில், ‘இந்து ஆன்மிக கண்காட்சியை 2 நாட்களில் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர். கண்காட்சிக்கு பள்ளி, மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக பஸ் வசதி தேவைப்படும் பள்ளி நிர்வாகிகள் 9840921026 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், கண்காட்சியை பார்வையிட வருபவர்களுக்காக கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் கிண்டி சிப்காட், ரேஸ் கோர்ஸ், தரமணி ஆகிய இடங்களில் இருந்து இலவசமாக ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படு கிறது’ என்றார்.

Next Story